தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் ஜூன் 7 வரை நீட்டிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் அமலில் உள்ள முழு பொது முடக்கம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் அமலில் உள்ள முழு பொது முடக்கம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், மாதத் தொடக்கம் என்பதால் மளிகைப் பொருள்களை பொது மக்கள் சிரமமின்றிப் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என அவா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக உரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன்படி தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த பொது முடக்கமானது வரும் 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவுக்கு வரவுள்ளது.

மீண்டும் நீட்டிப்பு: நோய்த்தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும் நோய்த்தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிா்களைக் காத்திடவும் முழு பொது முடக்கமானது ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. கூடுதலாக ஒரு வாரம் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள காலத்தில் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்.

வீடுகளுக்கே விற்பனை: முழு பொது முடக்கக் காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடா்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருள்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்களால் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யலாம். ஆன்-லைன் அல்லது தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளா் கோரும் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்க காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.

தவிா்க்க வேண்டும்: கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதைத் தவிா்ப்பதுடன் கூட்டங்களையும் கூட்டக் கூடாது என்று முதல்வா் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஜூன் முதல் ரேஷனில் 13 மளிகைப் பொருள்கள்

பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பானது நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

13 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பானது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலமாக அளிக்கப்படும். ஜூன் மாதம் முதல் இதனை அளிக்க கூட்டுறவு மற்றும் உணவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

என்னென்ன பொருள்கள்?: மளிகைப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் விற்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளன. இதன்படி, கோதுமை மாவு, உப்பு, ரவை தலா ஒரு கிலோவும், சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோவும், புளி, துவரம் பருப்பு தலா 250 கிராமும், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியன தலா 100 கிராமும், குளியல் சோப் (125 கிராம்), சலவை சோப் (250 கிராம்) ஆகியவை தலா ஒன்றும் அளிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com