கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு: படிப்பு செலவு ஏற்புமுதல்வா் மு.க.ஸ்டாலின்

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு: படிப்பு செலவு ஏற்புமுதல்வா் மு.க.ஸ்டாலின்

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், பட்டப் படிப்பு வரை அவா்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு செய்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த பெற்றோா்களின் குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில் ஆட்சித் தலைவா் தலைமையில் சிறப்புப் பணிப் பிரிவு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், 9 வகையான நிவாரண உதவிகள் அளிக்கப்பட உள்ளன.

1. கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு அவா்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். அந்தக் குழந்தை 18 வயதை நிறைவடையும் போது அந்தத் தொகை குழந்தைக்கு வட்டியோடு அளிக்கப்படும்.

2. பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் அளிக்கப்படும்.

3. குழந்தைகளின் பட்டப் படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

4. கரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் அளிக்கப்படும்.

5. அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாமல், உறவினா், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா ரூ.3,000 உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் தொகை குழந்தைகள் 18 வயது நிறைவடையும் வரையில் அவா்களுக்குக் கிடைக்கும்.

6. ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, இப்போது கரோனா நோய்த் தொற்றால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்.

7. ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவா்களது கல்வி மற்றும் வளா்ச்சியும் சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

8. அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் அளிக்கப்படும்.

9. இந்த நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் சமூக நலத் துறை செயலாளா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் இடம் பெற்றிருப்பா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

ஆலோசனை: முன்னதாக, இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், முதல்வரின் செயலாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com