தமிழகத்தின் தியாக தீபங்கள் - 81: பி.எஸ்.வசந்தன்

பி.எஸ்.வசந்தன் ராஜபாளையத்தில் 1922}ஆம் ஆண்டு பிறந்தார்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 81: பி.எஸ்.வசந்தன்

பி.எஸ்.வசந்தன் ராஜபாளையத்தில் 1922}ஆம் ஆண்டு பிறந்தார்.

10 வயதிலேயே கோவணத்தைக் கட்டிக்கொண்டு கையில் தேசியக் கொடியுடன் முழங்கிக் கொண்டே அடிக்கடி ஊரை வலம் வருவது வசந்தனின் வழக்கம். இதனால் "கோவணாண்டி காந்தி' என்று அழைக்கப்பட்டார்.

1930}களில் "கொடிப்போர்' உயிரோட்டமாக நடந்த இடங்களில் ஒன்று ராஜபாளையம். கொடியேற்றுபவர்களை சுட்டுத்தள்ளும் அளவுக்கு வெறித்தனம் தாண்டவமாடிய காலம். ராஜபாளையத்தில் "வானரப் படை' என்ற சிறுவர் படையை அமைத்தார். இவர்களும் சில இளைஞர்களும் ஆட்சியர் வருவதற்கு முன்பு அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்த மைதானம் முழுக்க குச்சிகளை நட்டு அவற்றில் கொடிகள் பறக்குமாறு செய்தனர்.

ராஜபாளையம் சஞ்சீவிமலையில் "ராமர் கல்' என்ற குன்றுபோன்ற பெரிய ஒற்றைப் பாறை உள்ளது. சுமார் 800 அடிக்கு மேல் உயரம். கீழே மிகச்சிறிய பகுதிதான் மலைமீது ஒட்டியிருக்கும். அது ஒரு அதிசயப் பாறை. அதன் மீது ஏறுவதைக் கற்பனைகூட செய்ய முடியாது. ராஜபாளையம் இளைஞர்கள் இரவோடு இரவாக பல உத்திகளைப் பின்பற்றி ஏறி பாறை உச்சியின் மீது கம்பத்தை நட்டு பெரிய கொடியைப் பறக்கவிட்டனர்.  

காமாட்சி டி.பி.ராமசாமி ராஜா, டி.பி.சுப்பராஜா, பி.எஸ்.வசந்தன் உள்ளிட்ட சிலர் உயிரைப் பணயம் வைத்து இச்செயலில் ஈடுபட்டனர்.

ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தையே வரவழைத்து எவ்வளவோ முயன்றும் மேலே ஏறமுடியாமல் கீழே இருந்தவாறே கொடியைக் குறிவைத்து துப்பாக்கியால் பலமுறை சுட்டனர். கொடியில் ஓட்டைகள் விழுந்தன. கொடி பறந்தவண்ணமே இருந்தது.

கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி எதிர்ப்பு என்று அனைத்துப் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

1942}இல் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் களமிறங்கி தந்திக் கம்பிகளை வெட்டுவது, தபால் பெட்டிகளை உடைப்பது என எல்லாவித போராட்ட வழிகளிலும் அதிதீவிரமாக ஈடுபட்டார். கைது செய்தது காவல் துறை. நடுரோட்டில் வசந்தனை நிறுத்தி அவரின் வாயில் "பூட்ஸ்' ஒன்றைத் திணித்துக் கவ்வ வைத்து, கைகளைப் பின்னால் கட்டி போலீஸார் தங்களின் பூட்ஸ் கால்களால் உதைத்தும், அடித்தும் இழுத்துச் சென்றனர்.

நான்கு மாதங்கள் "விசாரணை' என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து வசந்தனை உச்சகட்ட சித்திரவதை செய்தனர். ரத்தம் சொட்டும் வரை அடிப்பது, மிதிப்பது, துவைப்பது, நகக்கண்களில் ஊசி ஏற்றுவது, முகத்தில் சிறுநீர் பாய்ச்சுவது என இன்னும் வெளியில்கூட சொல்லமுடியாத பலவகையான கொடும் சித்திரவதைகளுக்கு ஆளானார்.

எனினும், இதில் ஈடுபட்டவர்கள் குறித்த ஒரு வரி ரகசியத்தைக்கூட வசந்தனின் வாயிலிருந்து வரவழைக்க முடியவில்லை.

"செத்தாலும் சாவாரே தவிர யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டார்' என்று தெரிந்த பின்னர் வசந்தனை நீதிமன்றத்தில் நிறுத்தி 15 மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்றுத் தந்தது போலீஸ்.

சிறையில் கிடைத்த தோழமையாலும் படித்த புத்தகங்களாலும் பொதுவுடைமையாளராகப் புத்துயிர்ப்புடன் வெளிவந்தார். விடுதலைக்குப் பிறகும் மக்கள் தொண்டாற்றிய வசந்தன் 9}8}1994}இல் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com