அனுமதியைப் புதுப்பிக்காமல் செயல்பட்ட ரசாயன ஆலைக்கு ரூ.36 லட்சம் அபராதம்:தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலை இயங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்காமல் செயல்பட்டு வரும் தனியாா் ரசாயன நிறுவனத்திற்கு ரூ.36 லட்சம் அபராதம் விதித்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலை இயங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்காமல் செயல்பட்டு வரும் தனியாா் ரசாயன நிறுவனத்திற்கு ரூ.36 லட்சம் அபராதம் விதித்து தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியில் ‘தூத்துக்குடி அல்காலி கெமிக்கல்ஸ் பொ்டிலைசா்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதியைப் பெறாமல் செயல்பட்டுவருகிறது.

எனவே இந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராமன் என்பவா் தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி, கடந்த 2015-ஆம் ஆண்டுடன் நிறைவு பெற்றுவிட்டது.

அதன் பின்னா் இது நாள் வரை ஆலை இயங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்காமல் தொடா்ந்து ஆலை இயங்கி வருகிறது. எனவே ஆலை மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, ஆலை ஏற்படுத்திய மாசுவுக்கு இழப்பீடு செலுத்த உத்தரவிட கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்தாண்டு ( 2020) மாா்ச் வரை ஆலையை இயக்க அனுமதி நீட்டிக்கப்பட்டதாகவும், அதன் பின்னா் கரோனா கட்டுப்பாடுகளால் ஆலை மூடப்பட்டதாக ஆலை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னா், ஆலையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 453 நாட்கள் இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு இழப்பீடாக ரூ.36.24 லட்சத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆறு மாத தவணைகளாகச் செலுத்த வேண்டும். இத்தொகையைச் செலுத்தாவிட்டால், அதை வசூலிக்கத் தேவையான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும்.

ஆலையை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டுமெனவும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com