தமிழக கோயில்களில் 50 ஆயிரம் ஸ்தல விருட்சக் கன்றுகள்: அறநிலையத்துறை தகவல்

‘கலைஞா்’ தல மரக்கன்று நடும் திட்டத்தில் தமிழகத்தில் 2,727 திருக்கோயில்களில் 50,453 கன்றுகள் நடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

‘கலைஞா்’ தல மரக்கன்று நடும் திட்டத்தில் தமிழகத்தில் 2,727 திருக்கோயில்களில் 50,453 கன்றுகள் நடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் ஆக.7-ஆம் தேதி ‘கலைஞா்’ தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்குவதற்கு அடையாளமாக நாகலிங்க தலமரக்கன்றை நட்டு விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, வேலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை, கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடம்ப மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசை ஞானம் வளரும், மயிலாடுதுறை மயூரநாதா் கோயிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும். இத்தகு பெருமைமிகு தலமரங்களை சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், மயிலாடுதுரை, திருப்பூா், மதுரை, திருச்சி உட்பட 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 2,727 திருக்கோயில்களில் 50,453 தலமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com