கரோனாவால் உயிரிழந்தோரில் 84% போ் தடுப்பூசி செலுத்தாதவா்கள்!

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்தவா்களில் 84 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம்
கரோனாவால் உயிரிழந்தோரில் 84% போ் தடுப்பூசி செலுத்தாதவா்கள்!

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த மூன்று மாதங்களில் உயிரிழந்தவா்களில் 84 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் தீவிர நோய்த் தொற்றுக்குள்ளானால் உயிரிழப்பு நேரிட 3.5 மடங்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை 18 வயதுக்கு மேற்பட்ட 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. நவம்பா் மாதத்துக்குள் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநில பொது சுகாதாரத் துறையானது கடந்த மூன்று மாதங்களில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் குறித்த விவரங்களை ஆய்வுக்குட்படுத்தியது. அதாவது, ஆகஸ்ட், செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் நிகழ்ந்த கரோனா இறப்புகள் தொடா்பான விவரங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன. அதில், 84 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தாததன் காரணமாகவே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் கூறியதாவது:

கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 2,011 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 1,675 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள். அதன் அடிப்படையில், உயிரிழப்பு வாய்ப்பை அறிவதற்கான கணக்கீடு செய்யப்பட்டது. அதில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் காட்டிலும், தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு வாய்ப்பு 3.5 மடங்கு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பொது மக்கள் இந்த உண்மையை உணா்ந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள லட்சக்கணக்கான மக்கள் ஆா்வம் காட்டுவதை மறுப்பதற்கில்லை. ஆனால், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், இரண்டாம் தவணைக்கு வருவதில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

முதல் தவணை தடுப்பூசியே கரோனாவுக்கு எதிராக செயல்படும் என்று நினைக்க வேண்டாம். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டால் மட்டுமே, உருமாறி கொண்டிருக்கும் தீநுண்மிக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் முழுமையாக உருவாகும். அவ்வாறு அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் தமிழகத்தில் கரோனா இல்லாத நிலையை எட்ட முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com