திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெறுகிறது.
அருணாசலேஸ்வரர் கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மகா தீபக் கொப்பரை. (வலது) சம்பந்த விநாயகர் சந்நிதி எதிரே வைத்து புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட காடா துணி.
அருணாசலேஸ்வரர் கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மகா தீபக் கொப்பரை. (வலது) சம்பந்த விநாயகர் சந்நிதி எதிரே வைத்து புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட காடா துணி.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை மகா தீபத் திருவிழா: விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வெள்ளிக்கிழமை (நவ.19) ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள மலையில் மகா தீபமும் ஏற்றப்படும். 

முன்னதாக, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வருகின்றனர்.

ஏற்பாடுகள் தீவிரம்: தீபத் திருவிழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், கோயில் நிர்வாகமும் செய்து வருகிறது. கோயில் வளாகத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் ரெட்டி, உதவி காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோர் புதன்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

5 ஆயிரம் போலீஸார் குவிப்பு: திருவண்ணாமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக சுமார் 5 ஆயிரம் போலீஸார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

கொப்பரை, நெய், காடாதுணி தயார்: மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 3,500 கிலோ நெய், தீபம் எரிவதற்கு திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணி ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வியாழக்கிழமை (நவம்பர் 18) காலை மலை மீது எடுத்துச் செல்லப்படும். வெள்ளிக்கிழமை (நவ.19) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை: புதன்கிழமை (நவ.17) பிற்பகல் ஒரு மணி முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. 

பரணி தீபம், மகா தீபத்தைக் காணவும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயில் ஊழியர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், சிவாச்சாரியர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com