பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல்: காலக்கெடுவை நிர்ணயிப்பது அவசியம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிப்பது அவசியம் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார். 
பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல்: காலக்கெடுவை நிர்ணயிப்பது அவசியம்

சென்னை:  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிப்பது அவசியம் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார். 

சிம்லாவில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்களுக்கான மாநாட்டில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது:

தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் அனைத்தும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்க விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள் அழைக்கப்படுகின்றனர்.  நேரமின்மையால் அனைவருக்கும் ஒரே நாளில் பேச வாய்ப்புத் தருவது என்பது  சிக்கலாகவே இருக்கிறது.

மாநில சட்டப் பேரவைகள் எதிர்கொண்டிருக்கும் முக்கிய பிரச்னையை கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். பெரும்பான்மை அடிப்படையில் சட்டப் பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சில நேரங்களில் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் அனுமதி தராமலோ அல்லது மசோதாவை திருப்பி அனுப்பாமலோ வைத்துக் கொள்கிறார்கள். இதற்கு கால வரையறை ஏதுமில்லை. சில மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பவே ஆளுநர்கள் மாதங்களை எடுத்துக் கொள்கிறார்கள். இது சட்டப் பேரவைகளுக்கான அதிகாரத்தை சிதைக்கிறது. எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திருப்பி அனுப்புவது போன்ற நடவடிக்கைகளுக்கான காலத்தை நிர்ணயம் செய்திட வேண்டும்.

காரணங்கள் தேவை: சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி அனுப்பும் போது, மசோதா மீது முடிவெடுக்காமல் இருக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். அவ்வாறு திருப்பி அனுப்பும் மசோதாக்கள் மீது காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டாமா?

மாநிலத்தில் உள்ள மக்களின் விருப்பங்களை எதிரொலிக்கும் வகையிலேயே சட்டப் பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. அத்தகைய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைப்பது, மக்களின் விருப்பங்களை புறந்தள்ளுவதாக அமையும். எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கான காரணங்களை சட்டப் பேரவை அறிந்து கொண்டால், அதற்கேற்ற வகையில் மற்றொரு மசோதாவை உருவாக்க முடியும்.

பேரவைத் தலைவர்களுக்கான அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க விவகாரங்களை தீர்ப்பாயம் போன்ற நிலையில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் விசாரணை நடத்தலாம். ஆனால், 10-ஆவது அட்டவணையின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் பேரவைத் தலைவரின் முடிவுகள் நீதிமன்ற விசாரணைக்குள் சென்று விடுகின்றன. இது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகும்.

10-ஆவது அட்டவணையின் கீழுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரவைத் தலைவர்கள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டாலோ அல்லது சட்டத்தை மீறிச் செயல்படுவதாக இருந்தாலோ நீதிமன்றங்கள் தலையிடலாம். அதேசமயம், தகுதிநீக்க விவகாரங்களை விசாரிப்பதற்கான கால அளவுகள் ஏதும் பேரவைத் தலைவருக்கு விதிக்கப்படவில்லை. எனவே, தகுதிநீக்க விவகாரங்களை விசாரிக்கும் கால அளவு சட்டப் பேரவையின் காலம் முடிவடையும் வரையில் சென்று விடுகிறது. எனவே, 10-ஆவது அட்டவணையில் கீழ் வழங்கப்பட்ட அதிகாரம் சிறப்பான மற்றும் பயனுள்ள வகையில் அமைந்திட அதிலுள்ள நிர்வாக ரீதியான சிக்கல்களைக் களைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com