தஞ்சாவூர் அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழு

அம்மாபேட்டை அருகே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உக்கடை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களின் படங்களைப் பார்வையிடும் மத்திய குழுவினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உக்கடை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களின் படங்களைப் பார்வையிடும் மத்திய குழுவினர்.


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தனர்.

தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற் பயிர்கள், வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

இக்குழுவில் மத்திய உள் துறை இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் விஜய் ராஜ்மோகன், ரனஞ்செய் சிங், எம்.வி.என். வரபிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் தமிழக அரசின் முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி வந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட உக்கடை அருகே செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்ட பயிர்களையும், புகைப்படங்களையும் பார்வையிட்டனர். மேலும், மாவட்டத்தில் மழையால் ஏறத்தாழ 6,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற் பயிர்கள் 33 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  விளக்கம் அளித்தார். மேலும், மாவட்டத்தில் தொடர் மழையால் தோட்டக்கலைப் பயிர்கள், 1,331 கூரை வீடுகள், 316 ஓட்டு வீடுகள் சேதமடைந்தது, 368 மாடுகள், 82 ஆடுகள், 5 எருமைகள் இறந்தது, ஆறுகள், வாய்க்கால்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வழிந்தோடியது தொடர்பாக ஆட்சியர் விளக்கிக் கூறினார்.

அப்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற் பயிர்கள், கரும்பு, வாழை தோட்டங்களில் தேங்கிய மழை நீர் வடியவில்லை என்றும், இதனால் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட வாழை, கரும்பு பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ. இராமலிங்கம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com