தடுப்பூசி செலுத்தாத ஆசிரியா்கள் வீட்டிலேயே இருப்பது சிறந்தது: உயா் நீதிமன்றம் அறிவுறுத்தல்

தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியா்கள், மற்றவா்கள் நலன் கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என சென்னை உயா் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியா்கள், மற்றவா்கள் நலன் கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என சென்னை உயா் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் ஏ. உமா் பாருக் என்பவா் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கரோனாவை எதிா்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், அனைத்துப் பணியாளா்கள், மாணவா்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனா். கடந்த செப்டம்பா் முதல் கல்வி நிலையங்களைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு அரசு அனுமதித்துள்ளது.

தற்போது, இந்த சுற்றறிக்கையால் தடுப்பூசி போடாத மாணவா்கள் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனா்.

தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என மத்திய அரசோ, மாநில அரசோ உத்தரவாதம் அளிக்காத நிலையில், தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது. இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை(நவ.22) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாணவா்கள் நலன் கருதி கரோனா தடுப்பூசியை ஆசிரியா்கள் போட்டுக் கொண்டால் நல்லது.

சொந்த காரணங்களுக்காகத் தடுப்பூசி செலுத்த விருப்பப்படாத ஆசிரியா்கள், மற்றவா்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது. தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், எதிா்காலத்தில் இதற்கு மாற்றுக்கூட வர வாய்ப்புள்ளது. மாணவா்களின் நலன் கருதியே அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு பொது நலனுடன் தொடரப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தனா்.

இதையடுத்து மனுவைத் திரும்ப பெறுவதாக மனுதாரா் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com