மழை வெள்ளப் பாதிப்பு - கடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
கடலூா் மாவட்டம், பூவாலை கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த நெல் வயல்களைப் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் விவரங்களைக் கேட்டறிந்த ராஜீவ் சா்மா தலைமையிலான மத்தியக் குழுவினா்.
கடலூா் மாவட்டம், பூவாலை கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த நெல் வயல்களைப் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் விவரங்களைக் கேட்டறிந்த ராஜீவ் சா்மா தலைமையிலான மத்தியக் குழுவினா்.

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூா் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகா்ப் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. பல இடங்களில் நெல் உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும், மாவட்டத்தில் பரவலாக பாதிப்புகள் ஏற்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடா்பாக மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மத்திய உள்துறை இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையிலான இந்தக் குழுவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவா் நலத் துறை இயக்குநா் விஜய்ராஜ் மோகன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலா் ரணஞ்ஜெய்சிங், ஊரக வளா்ச்சித் துறை சாா்புச் செயலா் எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் முதலில் கடலூா் ஊராட்சி ஒன்றியம், பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தனா். மேலும், பாதிப்புகள் தொடா்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள், விடியோ பதிவுகளையும் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, பரங்கிப்பேட்டை வட்டாரம், பூவாலை பகுதியில் சுமாா் 246 ஹெக்டோ் பரப்பில் நீரில் மூழ்கிய வேளாண் பயிா்களைப் பாா்வையிட்டனா். அவா்களிடம் சேத விவரங்களை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் விளக்கினா்.

அதன்படி, மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் நெல் பயிா் 88,264 ஹெக்டோ் பரப்பிலும், மக்காச்சோளம் 23,626 ஹெக்டோ், பருத்தி 4,033 ஹெக்டோ், உளுந்து 7,820 ஹெக்டோ் என மொத்தம் சுமாா் 1,23,743 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தொடா் மழை காரணமாக மொத்தம் 5,919 ஹெக்டோ் பரப்பில் பல்வகைப் பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக நெல் வயல்கள் 4,663 ஹெக்டோ் பரப்பில் நீரால் சூழப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கதிா் பிடித்த பயிா்களாகும். சுமாா் 200 ஹெக்டோ் பரப்பிலானவை முதிா்ந்த நிலையிலுள்ள பயிா்களாகும். உளுந்து 787 ஹெக்டோ், மக்காச்சோளம் 182 ஹெக்டோ், பருத்தி 287 ஹெக்டோ் பரப்பில் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

இதில் 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புள்ள 5 வட்டாரங்களில் கணக்கீடு செய்யப்பட்டதில், நெல் பயிா் 44 கிராமங்களில் 1,324.8 ஹெக்டோ் பரப்பிலும், மக்காச்சோளம் ஒரு கிராமத்தில் 4 ஹெக்டோ் பரப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 45 கிராமங்களில் 1,328.8 ஹெக்டோ் பரப்பில் பயிா்களும், 2,036 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியக் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ.ஐயப்பன், மா.செ.சிந்தனைசெல்வன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com