82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி முதலீடு: 92 ஆயிரம் வேலைவாய்ப்புகள் - கோவை மாநாட்டில் அறிவிப்பு

கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற தொழில்முனைவோர்.
கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற தொழில்முனைவோர்.

கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 92,420 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
 "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்களின் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ரூ.34,723 கோடி முதலீட்டில் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 அதேபோல, வான்வெளி, பாதுகாப்புத் துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் 7 நிறுவனங்கள் ரூ.485 கோடி முதலீட்டில் 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
 மேலும், ரூ.13,413 கோடி முதலீட்டில் 11,681 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 13 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதேபோல, ரூ.3,928 கோடி முதலீட்டில் 3,944 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 நிறுவனங்களின் வணிக உற்பத்தியை அவர் தொடங்கிவைத்தார்.
 இந்த முதலீடுகள் யாவும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன.
 வான்வெளி, பாதுகாப்புத் தொழில் துறை உற்பத்தி மேம்பாடு: இந்த ஒப்பந்தத்தில் வான்வெளி, பாதுகாப்புத் தொழில் துறைகளின் உற்பத்தியை மேம்படுத்த டிட்கோ நிறுவனம் டஸால்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.212 கோடி முதலீட்டில் அமைக்கும் திறன்மிகு மையம், அதானி, எல் அன்டு டி நிறுவனங்களின் தகவல் தரவு மையம், டால்மியா நிறுவனத்தின் சிமெண்ட் அரைக்கும் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் அடங்கும்.
 மேலும், இந்த நிகழ்ச்சியில், வான்வெளி, பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேட்டையும் முதல்வர் வெளியிட்டார். அத்துடன் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை, முதலீட்டாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-க்கான கைப்பேசி செயலியையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.
 இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, கா.ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன், கு.சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், ஜி.ஆர்.ஜி. குழுமத் தலைவர் நந்தினி ரங்கசாமி, பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பகல் 1 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com