ரூ.74 லட்சம் கோடி பொருளாதார இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.74 லட்சம் கோடி) பொருளாதார இலக்கை விரைவில் அடைவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கையை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கையை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.74 லட்சம் கோடி) பொருளாதார இலக்கை விரைவில் அடைவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
 "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற தலைப்பில் கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்குத் தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாறு மாதங்களில் 5 ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதையெல்லாம் சாதித்துவிட்டதாக இங்கு பேசியவர்கள் சுட்டிக்காட்டினர். ஆட்சிக்கு வந்தது முதல் இந்த அரசு கரோனா, பெருமழை போன்ற சவால்களை எதிர்கொண்டது. கரோனாவை எதிர்கொள்வதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். மக்கள் இல்லாமல் அரசு இயங்கிவிட முடியாது. அந்த மக்களைக் காப்பதுதான் அரசின் மகத்தான பணி. அதில் இந்த அரசு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
 தமிழ்நாடு முதலிடம் பெறும்:அடுத்ததாக, ஒவ்வொரு துறைக்கும் தேவையான திட்டங்களைத் தீட்டி அதற்கான செயல் வடிவங்கள், ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். இத்தகைய சோதனையான காலத்திலும் கூட தமிழகம் ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறது.
 மே மாதத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஜூலை மாதத்தில் ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது, செப்டம்பரில் ஏற்றுமதியாளர் மாநாட்டை முடித்துவிட்டு இப்போது மற்றொரு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது.
 மாநாடு என்பது கூட்டம் கூடுவது, பேசுவது, கோரிக்கை வைப்பது என்பதுடன் நிற்காமல், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் மாநாடாக இது நடந்து கொண்டிருக்கிறது. இதே வேகத்தில் போனால் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
 மு.க.ஸ்டாலின் நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதை விட தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்று சொல்லும் நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்.
 22 மாவட்டங்களில் முதலீடுகள்: இந்த மாநாட்டின் மூலம் 22 மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு அவர்களின் ஊர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 அண்மையில் வெளியான மத்திய அரசின் தொழிற்பேட்டைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமக்குப் பெருமை அளிப்பதாகும்.
 நாம் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.74 லட்சம் கோடி) பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
 நிதிநுட்பக் கொள்கை வெளியீடு: 2021-22-ஆம் நிதியாண்டுக்கான திருத்த வரவு - செலவுத் திட்ட உரையில் தமிழ்நாட்டில் நிதிநுட்ப நகரம் (ஃபின்டெக் சிட்டி) அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நிறுவனங்களின் உலக மையமாக மாற்றும் வகையில் இந்த மாநாட்டில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
 நிதிநுட்ப நிறுவனங்களுக்காக தமிழ்நாட்டில் 10 லட்சம் சதுர அடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும். இதற்காக, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தில் தனியாக நிதிநுட்பப் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.
 நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்: கடந்த 2000-ஆவது ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சென்னையில் டைடல் பார்க் திறக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாட்டின் 2, 3-ஆம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.
 பின்னலாடை, ஜவுளித் தொழில் உற்பத்தியில் போட்டி நாடுகளை வெல்லக் கூடியதாக நமது தயாரிப்புகள் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ஜவுளி, மருத்துவ ஜவுளி, தொழிலக ஜவுளி, விளையாட்டுத் துறை ஜவுளி உற்பத்தியைப் பெருக்குவதும், நவீனப்படுத்துவதும் அவசியமானது.
 மேலும், மின்னணுவியல் துறையில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் 25 சதவீத பங்களிப்பை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.
 எனவே காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களைப்போல கோவையும் மின்னணுவியல், மின்னணு வன்பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com