வாழப்பாடியில் சமுதாய வளைகாப்பு விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சேசன்சாவடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா
சேசன்சாவடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மகிழ்ச்சி, புத்துணர்வு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில்  சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் சேசன்சாவடி, முத்தம்பட்டி, சந்திரபிள்ளைவலசு ஆகிய 3 இடங்களில், வாழப்பாடி வட்டார  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக சமுதாய வளைகாப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

சேசன்சாவடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயவேல் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி கர்ப்பிணி பெண்களுக்கு சீபந்த சீர்வரிசை வழங்கி விழாவை தொடக்கி வைத்தார். 

குழந்தைகள் வளர்ச்சித்  திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி, மருத்துவர் வெற்றிவேல், கவிஞர் பெரியார்மன்னன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊட்டச்சத்து, தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும், உடல் நல ஆலோசனைகள் வழங்கினர்.

இந்நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியைகள் சேசன்சாவடி நித்யா, கவர்கல்பட்டி மணிமேகலை மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிசாமி, முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் கோவிந்தன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

சந்திரபிள்ளை வலசு கிராமத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவி செல்வராணி துரைசாமி தலைமை வகித்தார். அரசு மருத்துவர் பேரின்பம், வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி,  கிராம சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி  ஆகியோர் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா செந்தில் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை டி.ஜி.ராமா, கிராம சுகாதார செவிலியர் சசிகலா ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.  கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் தாலிக்கயிறு, வளையல் உள்ளிட்ட மங்கள பொருள்கள் சீபந்த சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com