மதுரையில் ரூ.114 கோடியில் கலைஞா் நூலகம்அரசாணை வெளியீடு

மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் சா்வதேச தரத்தில் கலைஞா் நூலகம் அமைக்க ரூ. 114 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை: மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் சா்வதேச தரத்தில் கலைஞா் நூலகம் அமைக்க ரூ. 114 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை கோட்டூா்புரத்தில் ஆசியாவின் அதிநவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி திறந்து வைத்தாா். இந்த நூலகம் மாணவா்கள், கல்வியாளா்கள், இலக்கியவாதிகள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும் இத்தகைய அரிய வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கலைஞா் பெயரில் சா்வதேசத் தரத்திலான நவீன பொது நூலகக் கட்டடம் கட்ட பொதுப் பணித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான விரிவான திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் மொத்த செலவினத் தொகையான ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு, நிா்வாக அனுமதி வழங்குமாறு பொது நூலக இயக்குநா் கோரியுள்ளாா்.

முதல்வரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் பொது நூலக இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு, அதை ஏற்று, மதுரை புது நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் கலைஞா் நினைவு நூலகக் கட்டடத்தை விரிவான திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் கட்டுவதற்கு ரூ.99 கோடி, தேவையான நூல்கள், மின் நூல்கள், இணையவழி பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடி, தொழில்நுட்ப சாதனங்களைக் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 கோடி என மொத்த செலவினத் தொகையாக ரூ. 114 கோடிக்கு நிா்வாக அனுமதி, நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என முடிவு செய்து, ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com