1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அக்.12-இல் ஆணையா் ஆலோசனை

தமிழகத்தில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை வரும் நவ.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை வரும் நவ.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் பங்கேற்கவுள்ள ஆலோசனைக் கூட்டம் அக்.12-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து தொற்று குறைந்ததால் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் கடந்த செப்.1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நவ. 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் அக்.12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள், கல்வித்துறை இயக்குநா்கள் பங்கேற்கவுள்ளனா். மேலும் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளா் காகா்லா உஷா உள்ளிட்ட உயா் அதிகாரிகளும் பங்கேற்கின்றனா்.

இதில் பொதுத் தோ்வுகளுக்குத் தேவையான தோ்வு மையங்கள் அமைப்பது, அங்கீகாரம் இல்லாத தனியாா் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாணவா்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்த தனியாா் பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பன குறித்த தகவல்களை கல்வி அலுவலா்கள் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த மாதம் ஆய்வு நடத்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களையும், பள்ளிகள் திறப்புக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்தும் தெரிவிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com