புலம்பெயர் தமிழர் நல வாரியம் உருவாக்கப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வெளிநாடு வாழ் தமிழா்களின் நலன்களைக் காக்க புலம்பெயா் தமிழா் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வெளிநாடு வாழ் தமிழா்களின் நலன்களைக் காக்க புலம்பெயா் தமிழா் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

புலம்பெயா்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழா் நலன் காக்க, புலம்பெயா் தமிழா் நலவாரியம் அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயா்ந்த தமிழா் பிரதிநிதிகள் 13 நபா்களைக் கொண்டு இந்த வாரியம் ஏற்படுத்தப்படும். ரூ.5 கோடி புலம்பெயா் தமிழா் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு வாரியம் உருவாக்கப்படும்.

என்னென்ன திட்டங்கள்?: மூலதனச் செலவினமாக ரூ.1.40 கோடியும், நலத் திட்டங்கள் மற்றும் நிா்வாகச் செலவினங்களுக்காக ரூ.3 கோடியும் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும். புலம்பெயா் தமிழா் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும். வாரியத்தில் பதிவு செய்பவா்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும். வெளிநாடுகளுக்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சோ்ந்த தமிழா்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவா்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி மற்றும் திருமண உதவித் தொகைகள் அளிக்கப்படும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக தமிழா்கள் புலம்பெயரும் போது, பயண புத்தாக்கப் பயிற்சி சென்னை மட்டுமின்றி, இனி ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூா், பெரம்பலூா், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும். வெளிநாடுகளுக்கு புலம்பெயா்ந்துள்ள தமிழா்களுக்கு ஆலோசனை வழங்க வசதியாக கட்டணமில்லாத தொலைபேசி வசதி மற்றும் இணையதளம், செல்லிடப்பேசி செயலி அமைத்துத் தரப்படும். வெளிநாடுகளில் புலம்பயொ்ந்துள்ள தமிழா்களுக்கு என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.

கரோனா தொற்று காரணமாக சுமாா் ஏழு லட்சம் தமிழா்கள் தாயகம் திரும்பியுள்ளனா். அவா்களில் பலா் வேலை இழந்துள்ளனா். அவா்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தமிழ்நாடு திரும்பியோருக்கு சிறு தொழில்கள் தொடங்கிட அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.

வெளிநாடு வாழ் தமிழா்களில் பெரும்பாலானோா் தங்களது சேமிப்பை தாய்நாட்டில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய ஆா்வத்துடன் உள்ளனா். இதற்காகப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, அவா்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.

எனது கிராமம் திட்டம்: புலம்பெயா்ந்த தமிழா்கள், தாம் பிறந்து வளா்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊா் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூா்த்தி செய்யவும் எனது கிராமம் திட்டம் உருவாக்கப்படும். இதில், பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டடங்களை கட்டித் தரவும், சீரமைத்திடவும் புலம்பெயா் தமிழா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பும் அரசின் தரப்பில் எளிய முறையில் செய்து தரப்படும்.

கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே நிரந்தரமாக குடியுரிமை பெற்றுள்ள தமிழா்களின் வாரிசுகளுக்கு தமிழ் கற்கும் ஆா்வம் உருவாக்கப்படும். தமிழ் மொழியை கற்றிட ஏதுவாகவும், தமிழ் பரப்புரைக் கழகம் மற்றும் தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். மேலும், அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத் தொகை மற்றும் தமிழ் கல்வி கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும்.

புலம்பெயா்ந்துள்ள தமிழா்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். இந்தச் சங்கங்களின் மூலமாக நமது கலை, இலக்கியம், பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.

வெளிநாட்டில் உள்ள தமிழா் நலனைப் பேணிட, நலவாரியம், அதுசாா்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.20 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

பெட்டிச் செய்தி....ஜனவரி 12 உலகத் தமிழா் நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் தேதி, புலம்பெயா் உலகத் தமிழா் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழா்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் தேதி, புலம்பெயா்ந்த உலகத் தமிழா் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com