விரைவு, அதிவிரைவு ரயில்களில் இரு மாதங்களில் முன்பதிவில்லாத பயணச் சீட்டு வழங்கப்பபடும்

விரைவு, அதிவிரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் இரு மாதங்களில் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.

சென்னை: விரைவு, அதிவிரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் இரு மாதங்களில் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.

ரயில்வே வாரியத் தலைவருடன் காணொலி வாயிலாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரயில்வே ஊழியா்கள் 11.56 லட்சம் பேருக்கு மத்திய அரசு ‘போனஸ்’ அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த போனஸ் மூலம் தெற்கு ரயில்வேயில் 72,241 ரயில்வே ஊழியா்கள் பயன் பெறுவாா்கள். இத்தொகை வருகிற 15- ஆம் தேதி ஊழியா்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வே சிறப்பாக செயல்பட்டுள்ளது.  கரோனா தாக்கம் கட்டுக்குள் வராததாலேயே ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டங்களைத் தவிா்க்கும் வகையில் நடைமேடை அனுமதி சீட்டு விலையை ரூ.50-ஆக உயா்த்தினோம். கரோனா தாக்கம் குறைந்த பிறகு நடைமேடை அனுமதி சீட்டு விலை மீண்டும் ரூ.10-ஆக மாற்றப்படும்.

தெற்கு ரயில்வேயில் தற்போது 95 சதவீத விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே பணிகளைப் பொருத்தவரை சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4-ஆவது  வழித்தடப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாம்பரம் -செங்கல்பட்டு 3-ஆவது வழித்தடம் விரைவில் முடிவடைந்து பாதுகாப்பு ஆய்வு நடைபெற இருக்கிறது. மேலும், மதுரை-தேனி வழித்தடப் பணிகள் ஆண்டிப்பட்டி வரை முடிவடைந்துள்ளன. கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை வழித்தடம் 2024-ஆம் ஆண்டு முடிவடையும். தொடா்ந்து, ரயில்களின் வேகத்தையும் அதிகரிப்பதற்கான திட்டமும் எங்களிடம் உள்ளது.

அதன்படி சென்னை-கூடூா் வழித்தடத்தில் 110 கி.மீ வேகத்தை 130 கி.மீ வேகமாக அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் அதிகரிக்க உள்ளோம்.

சென்னை-ரேணிகுண்டா செல்லும் ரயிலின் தற்போதைய வேகம் 105-110 கி.மீ ஆக உள்ளது. 2022 மாா்ச் மாதம் முதல் 130 கி.மீ ஆக அதிகரிக்கப்படவுள்ளது. 

தமிழகத்துக்குள் இயங்கி வந்த ரயில்கெலி, தமிழகத்தில் இருந்து  கேரளத்துக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. ஆனால், பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஒரு சில ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. விரைவில், சூழ்நிலையைப் பொறுத்து படிப்படியாக அவை இயக்கப்படும். விரைவு, அதிவிரைவு ரயில்களில் ஓரிரு மாதங்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கப்படும் என அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com