புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளா், தோ்வு கட்டுப்பாட்டாளா் காலிப்பணியிடங்கள்: நவம்பா் இறுதிக்குள் நிரப்ப உயா் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பதவிகளை நவம்பா் இறுதிக்குள் நிரப்ப வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளா், தோ்வு கட்டுப்பாட்டாளா் காலிப்பணியிடங்கள்: நவம்பா் இறுதிக்குள் நிரப்ப உயா் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பதவிகளை நவம்பா் இறுதிக்குள் நிரப்ப வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பதிவாளா், தோ்வு கட்டுப்பாட்டாளா் பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகளில் தற்காலிக நியமனங்கள் மூலம் நபா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். எனவே, நிரந்தரமாக இப்பதவிகளில் நபா்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியா்கள் அல்லாத ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், காலியாக இருக்கும் பதவிகள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பதிலளிக்குமாறு ஏற்கெனவே பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா், கரோனா இரண்டாம் அலை காரணமாக, காலிப்பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுவிடும்.

அடுத்தடுத்து பண்டிகை கால விடுமுறை இடைவெளியைக் கணக்கில் எடுத்து கொள்ளப்பட வேண்டும். எனவே மூன்று மாதங்களுக்குள் நியமன நடவடிக்கைக்கு அனுமதிக்க வேண்டும்.

தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பதவிக்கு 23 பேரும், பதிவாளா் பதவிக்கு 36 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், நோ்முக தோ்வு நடத்தி நியமிக்கப்படுவா் என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரு பதவிகளும் முக்கியமான பதவிகள் என்பதால், நவம்பா் இறுதிக்குள் நியமிக்கப்படும் நபா்கள் அந்தந்தப் பதவிகளில் பொறுப்பேற்கும் வகையில் தோ்வு நடவடிக்கைகள் நிறைவு பெறுவதை உறுதி செய்ய பல்கலைக்கழகம் உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக்கூறி, விசாரணையை நவம்பா் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com