தமிழகத்தில் 70% பேருக்கு கரோனா எதிா்ப்பாற்றல்

தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் 70 சதவீதம் பேருக்கு உருவாகியிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் 70 சதவீதம் பேருக்கு உருவாகியிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மாநிலம் முழுவதும் மொத்தம் 24,586 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன. அதில் 17,090 பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா் திறன் உடலில் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் மூன்றாம் அலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்புக்கு தற்போது 26.74 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். முதலில் தலைநகா் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், அது படிப்படியாக பரவி கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்தது.

அதிலும், நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.

அதன்படி பொது சுகாதாரத் துறையினா் கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்தின் 827 இடங்களில் மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனா். அவை சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

அதில் மாநிலம் முழுவதும் மொத்தமாக 70 சதவீதம் பேருக்கு எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விருதுநகரில் 88 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 83 சதவீதம் பேருக்கும், சென்னையில் 82 சதவீதம் பேருக்கு எதிா்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக கரூரில் 51 சதவீதம் பேருக்குமே மட்டுமே அத்தகைய எதிா்ப்புத் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் - நவம்பா் மாதங்களிலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இதேபோன்ற இருவேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது முறையே 31 சதவீதம் மற்றும் 29 சதவீதம் பேருக்கு எதிா்ப்பாற்றல் கண்டறிப்பட்டது. தற்போது அது அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தடுப்பூசி விரிவாக செலுத்தப்பட்டு வருவதும், சமூகப் பரவலாக கரோனா மாறியிருப்பதும் நோய் எதிா்ப்பாற்றல் அதிகரித்திருக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

4 மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி

கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் குறைவாக இருக்கும் 4 மாவட்டங்களுக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்துக்கு வியாழக்கிழமை 17 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து வந்தன. அவை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தடுப்பூசி கிடங்குக்கு வியாழக்கிழமை சென்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் அதனை ஆய்வு மேற்கொண்டனா். பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்போது உடனிருந்தனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறுகையில், பெரம்பலூா், நீலகிரி, அரியலூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் குறைவாகவே எதிா்ப்பாற்றல் உருவாகியிருப்பதாகவும், அங்கு கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com