கரோனா தடுப்பூசி முகாம்கள்: முதல்வா் நேரில் ஆய்வு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா்.

கிண்டி, மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாம்களைப் பாா்வையிட்ட அவா், தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களிடம் அது குறித்து கேட்டறிந்தாா். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்துமாறு அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 87 லட்சத்து 80,262 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், கிண்டி, மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும்

சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியா் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடமும், பணியாளா்களிடமும் உரையாடினாா்.

மாவட்ட வாரியாக முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை பெற்றவா்கள் பற்றிய விவரங்களை அப்போது முதல்வா் கேட்டறிந்தாா். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இருப்பிடத்தின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வா் அப்போது கேட்டு கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com