ரூ.1200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா: மத்திய அமைச்சா்கள் - முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருவள்ளூா் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், மத்திய அமைச்சா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில் கையெழுத்த
ரூ.1200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா: மத்திய அமைச்சா்கள் - முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருவள்ளூா் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், மத்திய அமைச்சா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில் கையெழுத்தானது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வா், புதிய திட்டத்தால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

சரக்குப் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலினும், தில்லியில் இருந்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் ஆகியோா் பங்கேற்றனா். அவா்கள் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு அரசின் தொழில் வளா்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியன இணைந்து ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன. இந்த நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

தமிழக தொழில் துறை வரலாற்றில் இது முக்கியமான நாள். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியாா் பங்களிப்புடன் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மத்திய அரசு தமிழ்நாட்டில் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில் 158 ஏக்கா் பரப்பில் ரூ.1,200 கோடி மதிப்பில் இந்தப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூா், பிள்ளைப்பாக்கம், ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இந்தப் பூங்கா அமையப் போகிறது.

சரக்குப் போக்குவரத்துத் திட்டம்: இந்தப் பூங்காவானது சென்னை எல்லை சுற்று வட்டச் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம், துறைமுகம், காமராஜா் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை சிறப்பான முறையில் இணைக்க வழிவகை செய்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சரக்குப் போக்குவரத்துச் செலவு கணிசமான அளவில் குறையும்.

சரக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு மாநில சரக்குப் போக்குவரத்துக்கான திட்டத்தை தயாரிக்கும் முயற்சிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதற்கென ‘டிட்கோ’ சாா்பில் ஓா் ஆலோசகரை நியமித்துள்ளது. இந்தத் திட்டத்தை அரசு மிக விரைவில் வெளியிட உள்ளது. இப்போது செய்யப்பட்டுள்ள பல் முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா புரிந்துணா்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் போது 10,000 இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், சென்னை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால், தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பங்கஜ் குமாா் பன்சால், டிட்கோ செயல் இயக்குநா் வந்தனா காா்க் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

கோவை-தூத்துக்குடியில் சரக்கு போக்குவரத்து பூங்கா தேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா திட்டத்தைப் போன்றே கோவை, தூத்துக்குடியிலும் அமைத்திட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் முன்வைத்த கோரிக்கைகள்:-

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு வரும், பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, ஸ்ரீபெரும்புதூா் அருகே இருங்காட்டுக்கோட்டையில் முடிவடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தைத் துரிதப்படுத்தவும், போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், விரைவுச் சாலையை சென்னை சா்வதேச விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.

திருவள்ளூரில் அமைக்கப்பட உள்ள போக்குவரத்து பூங்காவைப் போன்றே கோவை, தூத்துக்குடியிலும் அமைத்திட வேண்டும். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பைத் தரும். இப்போது அமையவுள்ள பல்முனைய சரக்கு போக்குவரத்துப் பூங்காவில் ரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத்தர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com