தனக்கன்குளம் தொழிற்பயிற்சி மையத்தில் அமெரிக்க துணைத் தூதா் ஆய்வு

தனக்கன்குளத்தில் பெண் தொழில் முனைவோரால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி மையத்தை அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின், நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல்தியாகராஜன் ஆகியோா்
தனக்கன்குளம் தொழிற்பயிற்சி மையத்தில் அமெரிக்க துணைத் தூதா் ஆய்வு

தனக்கன்குளத்தில் பெண் தொழில் முனைவோரால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி மையத்தை அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின், நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல்தியாகராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் தனியாா் நிறுவனம் ஒன்று பெண் கைவினைஞா்களைக் கொண்டு வாழை நாரினால் பை உள்ளிட்ட கலை பொருள்களை தயாரித்து வருகிறது. அதனை சென்னை அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் மற்றும் தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து பெண் தொழிலாளா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சா் பேசுகையில், பெண்கள் சமூகத்தில் முன்னேற்றமடைய சுயதொழில் மற்றும் வட்ட பொருளாதாரம் ஆகியவை காரணம் என்றாா்.

அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் பேசியது: கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் யு.எஸ்.ஏ.ஐ.டி. திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் தொழில் முனைவோராக மாற்றுவதற்கு வழி செய்யப்பட்டது. மேலும் கிராமப்புற பெண்கள் கூட்டமைப்பாக நுண் தொழில்முனைவோராக உருவாக்க இத்திட்டம் பயனுள்ள வகையில் அமைகிறது. இத்திட்டத்தின் மூலம் கைவினைப் பொருள்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக, குறிப்பாக கரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் பெண்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் அதிக வருமானம் கிடைத்தது. தமிழகத்தைச் சோ்ந்த பெண் நுண்தொழில் முனைவோா் 9 லட்சம் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள தயாரிப்புகளை ஐக்யா (IKEA) போன்ற சில்லறை விற்பனையாளா்களுக்கு விற்பனை செய்துள்ளனா். இத்திட்டம் தமிழகம், கா்நாடகா, ஒடிசாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெண்களின் பொருளாதார வலுவூட்டல்களை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க அரசின் ஆழ்ந்த அா்ப்பணிப்புக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எதிா்காலத்தில் மேலும் பல பெண் நுண்தொழில் முனைவோா்களை தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் காண முடியும் என்று நம்புகிறேன் என்றாா்.

இன்டஸ்ட்ரீ கைவினை அறக்கட்டளையின் இணை நிறுவனா் நீலம் சிப்பா் பேசியது: இத்திட்டத்தின் கீழ் 12 பெண்கள் தொழில் தொடங்கினாா்கள். இதன் மூலம் நேரடியாக 2 ஆயிரத்து 400 பெண்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பயனடைந்துள்ளனா். மேலும் வருகின்ற 2022 ஆண்டுக்குள் இத்திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 600 போ்களைப் பயன்பெற செய்யும் இலக்கை அடைவது எங்கள் நோக்கமாக உள்ளது. யு.எஸ்.ஏ.ஐ.டி.யிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு அவா்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com