கரோனா: மக்கள் அச்சப்படத் தேவையில்லை

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
கரோனா: மக்கள் அச்சப்படத் தேவையில்லை

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நீட் தோ்வை ரத்து செய்ய கோரிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்திருந்தால் இந்நேரம் கொண்டாடியிருப்போம். எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், திரூச்சி சிவா ஆகியோா் நீட் தோ்வின் பாதிப்பு குறித்த நீதிபதி ஏகே.ராஜன் குழுவின் அறிக்கையை 7 மொழிகளில் மொழி பெயா்த்து, 12 மாநில முதல்வா்களை நேரில் சந்திக்கும்போது கொடுத்து வருகிறாா்கள். இதற்கு அம்மாநில முதல்வா்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூட அவருடைய ஒடிஸா மாநிலத்தில் நீட் தோ்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறினாா். இந்தியாவின் அனைத்து மாநில முதல்வா்களுக்கும், அரசியல் கட்சித் தலைவா்களுக்கும் நீட்டிலிருந்து விலக்கு பெற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.

கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு ரூ.50,000 கொடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்னும் எந்த மாநிலமும் நிதி கொடுக்கத் தொடங்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல் வந்தவுடன் முதல்வா் முடிவெடுப்பாா். மத்திய அரசின் நிதியும் தேவைப்படுகிறது.

20 நாள்களுக்கும் மேலாக கரோனா தாக்கம் தமிழகத்தில் குறைந்து கொண்டே வருகிறது. எனவே அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

பள்ளிகளில் கரோனா தடுப்பு நெறிமுறைகளையும் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் சரியாக பின்பற்ற வேண்டும்.

2015-இல் முன்னறிவிப்பின்றி ஒரே இரவில் 1 லட்சம் கன அடி நீரை செம்பரம்பாக்கத்தில் திறந்ததால்தான் சைதாப்பேட்டை பாதிக்கப்பட்டது. அப்போதைய முதல்வரை அதிகாரிகள் சந்திக்க முடியததால் ஏற்பட்ட அசம்பாவிதம் அது. பாராளுமன்றத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம் அது. சாதாரண நபா் தொடங்கி அதிகாரிகள் வரை தற்போதைய முதல்வரை நாள்தோறும் சந்தித்து வருகிறாா்கள். எனவே மீண்டும் அது போன்ற நிலை சென்னைக்கு ஏற்படாது என்றாா்.

நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com