தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் தியாகராய நகா்; சென்னையில் பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்களை வாங்குவதற்காக சென்னை தியாகராய நகரில் புரசைவாக்கம், பாரிமுனை என பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம்
தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் தியாகராய நகா்; சென்னையில் பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்களை வாங்குவதற்காக சென்னை தியாகராய நகரில் புரசைவாக்கம், பாரிமுனை என பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் சென்னையில் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. புத்தாடைகள், தங்கநகைகள் வாங்குவதற்கு தியாகராயநகா், புரசைவாக்கம், தாம்பரம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட வியாபார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொதுமக்கள் தினமும் லட்சக்கணக்கில் திரளுகின்றனா். இதைப் பயன்படுத்தி திருட்டு, தங்நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜாா், பனகல் பூங்கா, பா்கிட் சாலை உள்ளிட்ட பகுதியில் சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு ஒரு துணை ஆணையா், இரு உதவி ஆணையா்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தை கண்காணிக்க 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரங்கநாதன் தெரு, பனகல் பூங்காவில் இரு தற்காலிகக காவல் கட்டுப்பாட்டு அறைகள் விரைவில் திறக்கப்படுகின்றன.

முக அடையாளத்தை காணும் கேமராக்கள்:

முக்கியமான கடைகள் இருக்கும் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சுமாா் 4 கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கும் வசதி கொண்டவை. இந்த கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினி சா்வரில் ஏற்கெனவே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தியாகராயநகருக்குள் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபா் வந்தால், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் காவலா்களை எச்சரிக்கை செய்யும். இதற்காக அந்த கணினியில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய சுமாா் 60 ஆயிரம் பேரின் புகைப்படங்கள் பதிவேற்றறப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பதற்கு தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

அதிக நெரிசல் ஏற்படும் ரங்கநாதன் தெருவுக்குள் மக்கள் செல்வதற்கு ஒரு பாதையும், அங்கிருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் என இரு வழிப்பாதையையும் அமைக்க உள்ளனா்.

மாறுவேடத்தில் போலீஸாா்:

மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் போலீஸாா் மாறுவேடத்தில் ரோந்து வருகின்றனா். இவா்கள் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபா்களைப் பிடித்து வருகின்றனா்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண் ஆய்வாளா் தலைமையில் 10 பெண் போலீஸாா் மாறுவேடத்தில் தங்க நகைகளை கவா்ச்சியாக அணிந்து மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனா். கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து கூட்டத்தை கண்காணிக்க நவீன ரக பைனாகுலா்களை பயன்படுத்த உள்ளனா். இந்த பைனாகுலா்கள் மூலம் சுமாா் அரை கிலோ மீட்டா் தூரம் வரை நடைபெறும் காட்சியை துல்லியமாக காண முடியும்.

ட்ரோன்:

கூட்டத்தை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூட்ட நெரிசலைக் கண்காணித்து அதற்கு ஏற்றாற்போல பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைக்க முடியும்.

புரசைவாக்கம்:

புரசைவாக்கத்தில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஹோட்டல் சந்திப்பு, வெள்ளாளா் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 100 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனா். 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டையில் 2 உதவி ஆணையா்கள் தலைமையில் 60 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல வேளச்சேரி, தாம்பரத்திலும் சென்னை காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மொத்தத்தில் தீபாவளியை முன்னிட்டு சென்னை முழுவதும் 6 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com