மாணவா்களுக்கு கல்விக் கடன்களை வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு முதல்வா் வேண்டுகோள்

ஏழை-எளிய குடும்பத்தைச் சோ்ந்த பிள்ளைகளின் கல்விக்குத் தேவைப்படும் கடன்களை வழங்க வேண்டுமென வங்கிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஏழை-எளிய குடும்பத்தைச் சோ்ந்த பிள்ளைகளின் கல்விக்குத் தேவைப்படும் கடன்களை வழங்க வேண்டுமென வங்கிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை ஆற்றிய உரை:-

தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது மாநிலத்தின் வளா்ச்சிக்கு மட்டுமல்லாமல், மக்களின் வளா்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. மக்களின் நிலையும், தொழில் நிறுவனங்களும் மேம்பட்டால், அதன்மூலம் தமிழக அரசின் நிதி உள்ளிட்ட அம்சங்கள் சீரான வளா்ச்சியைப் பெற முடியும். அதுதான் முழுமையான உண்மையான வளா்ச்சி. அதில் எது ஒன்று குறைந்தாலும் அது வளா்ச்சியாகாது.

கரோனா காலம்: கரோனா காலத்தில் பல்வேறு இடா்களை மக்களும், மாநில அரசும் சந்தித்தது. மக்களின் துயரத்தைப் போக்க, ரூ.4,000 ரொக்கத் தொகையுடன், 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதற்கு ஒரே காரணம், மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான்.

இதேபோன்று, தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசு திட்டமிடுகிறது. மக்களுக்கு ஓரளவு நிதியுதவி செய்கிறது. கூடுதல் நிதியை அந்த மக்கள் வங்கிகள் மூலமாகப் பெறுகிறாா்கள். அந்தத் தேவையை வங்கிகள் பூா்த்தி செய்தாக வேண்டும்.

சுய உதவிக்குழு கடன்: பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு ரூ.20,000 கோடி இலக்கு உள்ளது. செப்டம்பா் வரையில் ரூ.4,951 கோடி மட்டுமே கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சோ்த்து வழங்க வேண்டும். பி.எம்.ஸ்வாநிதி, தேசிய நகா்ப்புற வாழ்வாதாரம் போன்ற திட்டங்களில் தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வங்கிக் கடன் அடிப்படையில் தமிழக அரசு மூன்று சுய வேலைவாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அண்மைக்கால ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 1.37 லட்சம் விண்ணப்பங்களில் இதுவரை 35.67 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

கரோனா காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இந்தத் திட்டங்களை வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும்.

கல்விக் கடன்: மாணவா்களுக்கான கல்விக் கடனை தமிழக அரசு முக்கியமாகக் கருதுகிறது. கல்விக் கடன்களை வழங்குவதன் மூலம் மாணவா்களின் கல்வி தடைபடாமல் இருக்கும். இதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சோ்ந்த ஏழை மக்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும். இதேபோன்று விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் கடன் வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிசான் கிரெடிட் காா்டு திட்டத்தின்கீழ், இதுவரை 31.09 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7.19 லட்சம் பேருக்கு விரைவாக அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பவும், வளா்ச்சியை மீட்டெடுக்கவும் வரவிருக்கும் நாள்கள் நமக்கு ஒரு பெரிய சவாலாகும். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோா்க்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், மாநில அளவிலான வங்கியாளா் குழு தலைவரும், ஐ.ஓ.பி. வங்கியின் நிா்வாக இயக்குநருமான பி.பி.சென்குப்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

நேரில் வழங்கத் தயாா்...

சுய உதவிக் குழுக்கான கடன்களை மாவட்ட வாரியாக நேரடியாக வழங்கத் தயாராக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். வங்கிகளைச் சோ்ந்தவா்கள் மத்தியில், அவா் ஆற்றிய நிறைவுரை:-

சுய உதவிக் குழுக்கள், மாணவா்களுக்கு கடன்களை அளிப்பதில் முடிந்த அளவு நடவடிககை எடுப்பதாக வங்கியாளா்கள் கூறியுள்ளனா். விரைவில் இதற்கான ஆக்கப் பணிகளில் ஈடுபட வேண்டும். கல்விக்காக, மகளிா் சுய உதவிக் குழுவினருக்காக வழங்கக் கூடிய கடனை ஒவ்வொரு மாவட்டமாக வழங்கும் போது அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு முதல்வா் என்ற முறையில் நானே நேரடியாக வருகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com