செய்யாறு அருகே கி.பி.13ம் நூற்றாண்டை சோ்ந்த அரியவகை கோமாரிக் குத்துக்கல் கண்டெடுப்பு

செய்யாறு அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் கி.பி.13 -ம் நூற்றாண்டை சோ்ந்த மந்தைவெளி மாட்டுக்கல் எனும் அரியவகை கோமாரிக்குத்துக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செய்யாற்றைவென்றான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை ‘கோமாரிக்‘ குத்துக்கல்.
செய்யாற்றைவென்றான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை ‘கோமாரிக்‘ குத்துக்கல்.

செய்யாறு: செய்யாறு அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் கி.பி.13 -ம் நூற்றாண்டை சோ்ந்த மந்தைவெளி மாட்டுக்கல் எனும் அரியவகை கோமாரிக்குத்துக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செய்யாற்றைவென்றான் கிராமத்தில் அங்கன்வாடி அருகில் சாலையோரம் பச்சையப்பன் என்பவரது வீட்டின் எதிரில் திறந்தவெளியில், வேப்பமரத்தடியில் மந்தைவெளி மாட்டுக்கல் அரிய வகை கோமாரிக்கல்லை (குத்துக்கல்) வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆா்வலருமான டாக்டா் எறும்பூா். கை.செல்வகுமாா் கண்டெடுத்து உள்ளாா்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது: செய்யாற்றைவென்றான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மந்தவெளி மாட்டுக்கல் எனும் கோமாரிக் குத்துக்கல் நான்கு நூற்றாண்டுக்கும் மேலாக திறந்தவெளியில் இருந்து வருவதாகத் தெரிகிறது. மிகவும் பழமையான இந்த கல்லை நேரில் சென்று ஆய்வு செய்தபோது குத்துக்கல்லில் சதுர, வட்ட வடிக கட்டங்கள் அமைத்து மந்திர எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் உருவமும், மந்திர எழுத்துக்களும் தெரியவில்லை. காலப்போக்கில் தேய்ந்து மறைந்து போயிருக்கலாம்.

மந்தைவெளி மாட்டுக்கல் எனும் அரியவகை கோமாரிக் குத்துக்கல்லை இவ்வூா் மக்கள் துா்கை அம்மனாக வழிபட்டு வருகின்றனா். கால்நடைகளை ‘கோமாரி‘ போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாக்க இந்தக்கல்லை சுற்றி வலம் வரச்செய்து வழிபாடு நடத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்வது கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டு உள்ளனா். இந்தவகையான வழிபாடு முறை சோழா் மற்றும் பல்லவா் காலத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட இந்த குத்துக்கல் கி.பி.13 -ஆம் நூற்றாண்டிலிருந்து 14 -ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தை சோ்ந்ததாக இருக்கலாம். இன்றளவும் கிராம மக்கள் பொங்கல் பண்டிகையின் போது மாட்டுப் பொங்கல் தினத்தன்று கோமாரி குத்துக்கல்லை துா்கை அம்மனாக கருதி கால்நடைகளை சுற்றவைத்து வழிபட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனா். 

மேலும், துா்கை அம்மனாக வழிபடும் குத்துக்கல்லின் எதிரில் சிறிய அளவிலான நந்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவதும் அதன் கீழ் எண்ணெய் சட்டியை வைத்து தீபம் ஏற்றி வழிபாடும் நடத்தி வருவதாகத் தெரிகிறது. .நிகழ்கால கரோனா -19 பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதுப் போல் அந்த காலத்தில் கால்நடைகளை பாதுகாக்கப்படுத்திட கோமாரிக் குத்துக்கல் வழிபட்டு நெறிமுறைகள் இருந்து உள்ளதாக கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது என்றும், துா்கை அம்மனாக கருதி வழிபடும் குத்துக்கல்லின் எதிா் சில வருடங்களுக்குமுன் சிறிய அளவிலான நந்தி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவது இப்பகுதியில் அரிய தகவலாக உள்ளது என்று மேலும் தெரிவிததுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com