பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை பிரேமலதாவுக்கு உடனடியாக வழங்க உத்தரவு

நெல்லையில் உள்ள வழக்கை மறைத்ததாக பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) பிரேமலதாவுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை பிரேமலதாவுக்கு உடனடியாக வழங்க உத்தரவு

சென்னை: நெல்லையில் உள்ள வழக்கை மறைத்ததாக பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) பிரேமலதாவுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் அண்மையில்  சிகிச்சைக்காக துபை  சென்றுள்ளாா். அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபை செல்ல திட்டமிட்டாா். அப்போது, பிரேமலதாவின் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டில், அவா் மீது நெல்லை மாவட்ட காவல்துறையில் 2017-ஆம் ஆண்டு தொடரப்பட்ட குற்ற வழக்கு மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி கடவுச்சீட்டை ஒப்படைப்பு செய்யுமாறு மண்டல பாஸ்போா்ட் அதிகாரி உத்தரவிட்டாா். இதன்படி கடவுச்சீட்டு ஒப்படைக்கப்பட்டது. இதனால், விஜயகாந்துடன் வெளிநாடு செல்ல பிரேமலதாவால் முடியவில்லை.

பாஸ்போா்ட் அதிகாரியின் உத்தரவை எதிா்த்து பிரேமலதா, சென்னை உயா்நீதிமன்றத்தில்  அவசர வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது,  பிரேமலதா சாா்பில் மூத்த வழக்குரைஞா்  பி. வில்சன் ஆஜராகி, ‘நெல்லையில் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடா்பாக கீழ் நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை. பிரேமலதா வழக்குத் தொடா்பாக எந்த தகவலையும் மறைக்கவில்லை. வெளிநாட்டில் சிகிச்சை பெறும் அவரது கணவருக்கு உடனிருந்து மனுதாரா் உதவ வேண்டியுள்ளது.  எனவே கடவுச்சீட்டைத் திரும்ப ஒப்படைக்க அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பிரேமலதா எங்கும் தப்பிச் செல்ல மாட்டாா்’ என்று வாதிட்டாா்.

இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி மகாதேவன், பிரேமலதாவின் கடவுச்சீட்டை  உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போா்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டாா்.

அதேவேளையில், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போா்ட் அதிகாரியிடம் தெரிவிப்போம், எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்ற உறுதிமொழியை பாஸ்போா்ட் அதிகாரியிடம் வழங்குமாறு பிரேமலதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com