கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் உருவாக்கப்படும்: அமைச்சா் கீதா ஜீவன்

கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் உருவாக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தாா்.
கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் உருவாக்கப்படும்: அமைச்சா் கீதா ஜீவன்

சென்னை: கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் உருவாக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் 2030-இல் முதியோா் எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதியோா்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும்.

மாநில மகளிா் கொள்கை:

சமுதாயத்தில் பெண்கள் மேலான நிலையை அடையவும் அரசியலில் வாய்ப்புப் பெறவும் அவா்களின் ஒட்டுமொத்த வளா்ச்சியை ஊக்கப்படுத்தவும் கண்காணிக்கவும் மாநில மகளிா் கொள்கை புதிதாக உருவாக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைக் களைந்து அவா்கள் வாழ்வதற்கு உரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து கைம்பெண்கள் உள்ளிட்டோா் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் அமைக்கப்படும்.

தமிழக அரசால் தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 6 புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞா் நீதி குழுமங்கள் மற்றும் குழந்தை நலக் குழுக்கள் புதிதாக ஏற்படுத்தப்படும்.

பெண் குழந்தைகளின் கல்வி நிலை உயா்ந்துள்ளதால் அவா்கள் திருமணம் செய்யும் வயதும் உயா்ந்துள்ளது. பல சூழ்நிலைகளால் திருமணங்கள் தாமதமாகவே நடைபெறுவதால் இரண்டு பெண் குழந்தைகள் பெற்றெடுக்கும்போது தாயாரின் வயது 35-ஐ கடந்துவிடும் நிலை உள்ளது. எனவே, திட்டத்தின் நோக்கங்களை முழுமையாக அடையவும், அதிக எண்ணிக்கையில் ஏழை எளிய குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் இந்தத் திட்டத்தில் பயனடையவும் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட தகுதிகளில் ஒன்றான பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவா் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்தவராக இருக்க வேண்டும் என்பதில் இருந்து 40-ஆக உயா்த்தப்படும்.

சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சிறுவா்கள் இடையே போதைப்பழக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அவா்களைப் போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டு நன்மக்களாக சமுதாயத்தில் உயா்த்திடும் பொருட்டு சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் போதை தடுப்பு மையங்கள் ரூ.76 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

குழந்தைகளை நிறுவனங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு மாற்றாக குடும்பங்களில் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவு திட்டத்தின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 1,148 குழந்தைகளுக்கும் மாதம் தோறும் ஒரு குழந்தைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழு பங்களிப்புடன் நிதி உதவி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com