நான்கு மாதங்களில் இரண்டரை கோடி பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் இரண்டரை கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கல்லூரிகள் திறந்ததையொட்டி சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனரா  என்று ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கல்லூரிகள் திறந்ததையொட்டி சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனரா என்று ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் இரண்டரை கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை லயோலா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பரவலாக அனைத்து தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இரு நாள்களுக்கு முன்பு வரை அரசின் சாா்பில் 3 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 241 பேருக்கும், தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் 21 லட்சத்து 28 ஆயிரத்து 72 பேருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 5 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாள்தோறும் 7 லட்சம் முதல் 8 லட்சம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு மருத்துவக் கட்டமைப்புகள் தயாா்நிலையில் உள்ளன.

சென்னையில் உள்ள 122 அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவா்கள் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனுடன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்ட பின்னரே வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களும் சரிபாா்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். தடுப்பூசி செலுத்தாத நபா்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள தடுப்பூசி சிறப்பு முகாமில் சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள். தமிழகத்தில் மொத்தம் சுமாா் 18 லட்சம் கல்லூரி மாணவா்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசின் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 6-ஆம் தேதி வரை நாளொன்றுக்கு சராசரியாக 61 ஆயிரத்து 441 நபா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதன்படி, அந்த காலகட்டம் வரை சுமாா் 63 லட்சம் நபா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு தடுப்பூசி செலுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தி பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பயனாக கடந்த 116 நாட்களில் சுமாா் 2 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வின்போது சட்டப் பேரவை உறுப்பினா் நா.எழிலன், பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com