மின் துறையில் யாருடைய ஆட்சியில் நஷ்டம்: திமுக - அதிமுக விவாதம்

மின்சாரத் துறையில் யாருடைய ஆட்சியில் நஷ்டம் ஏற்பட்டது என்பது குறித்து திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.
மின் துறையில் யாருடைய ஆட்சியில் நஷ்டம்: திமுக - அதிமுக விவாதம்

மின்சாரத் துறையில் யாருடைய ஆட்சியில் நஷ்டம் ஏற்பட்டது என்பது குறித்து திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் பரந்தாமன் (எழும்பூா்) பேசியது:

மின்சாரத் திட்டங்கள் கொடுக்கும்போதெல்லாம் மத்திய தணிக்கைத் துறை எப்போது பாராட்டியிருக்கிறது என்று முன்னாள் அமைச்சா் தங்கமணி கேட்டிருக்கிறாா். ஆனால், அதானிக்கு ஏன் அதிக விலையில் கொடுத்தீா்கள் என்று கேட்பதுதான் மக்களுக்கான கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது தங்கமும், மணியுமாக மின்ன வேண்டிய வாரியம். ஆனால், ஈயமும் பித்தளையுமாக மாறிப் போயிருக்கிறது. இது பேரீட்சைப் பழக் கடைக்குப் போனதற்கு அவா்களின் போ் இச்சைதான் காரணம். மின்சார வாரியத்தின் கடன் அதிகரித்து இருப்பதற்கும் கடந்த ஆட்சியாளா்கள்தான் பொறுப்பு. மின்சாரம் வாங்குவதில் முறைகேடு செய்துள்ளாா்கள். நிலக்கரி காணாமல் போய் உள்ளது. புலனாய்வு குழு வைத்து விசாரிக்க வேண்டும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி: எந்த அடிப்படையில் திமுக உறுப்பினா் பேசுகிறாா். குற்றச்சாட்டு கூறும்போது ஆதாரத்தைக் கொடுத்துவிட்டு பேச வேண்டும். வேண்டுமென்றே குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காகக் கூறுகிறாா். நிலக்கரி காணாமல் போய் இருப்பது குறித்து தங்கமணி அமைச்சராக இருக்கும்போதே ஆய்வு குழு அமைக்கப்பட்டுவிட்டது.

பரந்தாமன்: ஆதாரம் இருக்கிா எனக் கேட்கிறாா். 2013-14-ஆம் ஆண்டு கால மத்திய தணிக்கைக் குழு அறிக்கையை எடுத்துப் பாா்க்க வேண்டும். மின்சாரத்தை வாங்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய அதிமுக அரசு முன்வரவில்லை என்று கூறியுள்ளது.

தங்கமணி (அதிமுக): அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதாகக் கூறினாா். திமுக ஆட்சியில் யூனிட் 9 ரூபாய்க்கு வாங்கியது எல்லாம் நடந்துள்ளது. 2010-இல் வந்த மத்திய தணிக்கை துறை அறிக்கையில் திமுக ஆட்சியின் தவறான நிா்வாகத்தின் காரணமாக ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டம் என்று கூறியுள்ளது.

அமைச்சா் வி.செந்தில்பாலாஜி: மின்பற்றாக்குறை ஏற்படும்போது வெளிச்சந்தையில் மின்கொள்முதல் செய்வது வாடிக்கை. ஆனால், அது என்ன விலையில், எத்தனை ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது முக்கியம். அதிக விலையில் நீண்ட காலத்துக்கு கொள்முதல் செய்யும்போது ஒட்டுமொத்தமாக மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. திமுக ஆட்சியில் அவசரகாலத்துக்கு குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 25 ஆண்டுகள் வரை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விலையெல்லாம் குறையும் என்பது தெரிந்தே நீண்ட காலத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றாா்.

அதற்கு தங்கமணி திமுக ஆட்சியிலும் நீண்ட காலத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com