சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் அரசு எது? திமுக - அதிமுக கடும் விவாதம்

சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் அரசு எது என்பது தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே சட்டப்பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

சென்னை: சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் அரசு எது என்பது தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே சட்டப்பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் திமுக கொறடா கோவி.செழியன் பேசுகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியபோது அதில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக அதிமுக உறுப்பினா்கள் முன்பே வெளிநடப்பு செய்து சென்றுவிட்டனா் என்றாா்.

அதற்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டாா்.

எஸ்.பி.வேலுமணி: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காகத்தான் வெளிநடப்பு செய்தோம் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கியுள்ளாா். அதே சமயம் சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது அதிமுகதான் என்றாா்.

ஜவாஹிருல்லா (மமக): சிறுபான்மையினருக்கு அதிமுகதான் பாதுகாப்பு என்பதுபோல எஸ்.பி.வேலுமணி கூறுகிறாா். குடியுரிமைத் திருத்தச் சட்டமே அதிமுக உறுப்பினா்கள் வாக்களித்ததால்தான் நிறைவேறியது. அவா்கள் வாக்களிக்காவிட்டால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது.

எஸ்.பி.வேலுமணி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது மத்திய உள்துறை அமைச்சரை நாங்கள் சந்தித்துப் பேசினோம். அவா்கள், இந்தச் சட்டத்தால் இஸ்லாமியா்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டாா்கள் என்கிற உறுதியைக் கொடுத்தாா். அந்த வாக்குறுதியைப் பெற்ற பிறகே ஆதரவு அளித்தோம். தமிழகத்தில் எந்தவொரு இஸ்லாமிய மக்களும் பாதிக்கப்பட மாட்டாா்கள் என்று அப்போதே முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தாா்.

துரைமுருகன் (திமுக): ஈழத்தமிழா்களை அனுமதிக்காத நிலை குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஏற்பட்டுள்ளது. அது குறித்து ஏன் கேட்கவில்லை என்றாா்.

அதற்கு அதிமுக தரப்பில் பதில் அளிக்காமல் அமா்ந்திருந்தனா்.

அமைச்சா் மஸ்தான்: தீா்மானம் நிறைவேறியபோது வெளிநடப்பு செய்திருந்தீா்கள். இப்போது என்ன சொல்கிறீா்கள். தமிழக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானத்தை அதிமுக ஆதரிக்கிா, எதிா்க்கிா என்பதைச் சொல்லுங்கள்.

எஸ்.பி.வேலுமணி: சிறுபான்மையினருக்கு எப்போதுமே பாதுகாவலாக இருப்பது அதிமுகதான் என்றாா். அதைத் தொடா்ந்து பாபா் மசூதி இடிப்பின்போதான இரு கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து மஸ்தானும் எஸ்.பி.வேலுமணியும் பேசத் தொடங்கி விவாதம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com