திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஆரவாரமின்றி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஆரவாரமின்றி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

தென்கயிலாயம் எனப்போற்றப்படும் பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை ஏறிச் செல்லும் வழியில் தாயுமான சுவாமியும், மலை மீது உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில், திருச்சி மலைக்கோட்டை கோயிலில் தலா 75 கிலோ வீதம் 150 கிலோவில் இரண்டு மெகா கொழுக்கட்டை முன்தினம் முதல் கொண்டு தயாரிக்கப்படுவது வழக்கம். 

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்​ கோயில்

விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு கொழுக்கட்டை மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும், மற்றொரு கொழுக்கட்டை தூளி கட்டி மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தப்படும்.

பின்னர், உச்சிப்பிள்ளையாருக்கு படைத்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவர். 

மேலும்,சதுர்த்தி நாளன்று காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கானோர் மலை மீது ஏறி உச்சிப்பிள்ளையாரை வழிபடுவர். தொடர்ந்து, 12 நாள்களுக்கு விநாயகப் பெருமான் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 13 ஆம் நாளில், உற்சவ மாணிக்க விநாயகருக்கு சுமார் 27 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். 

கரோனாவால் ஆரவாரமின்றி நடைபெற்ற சதுர்த்தி விழா: ஆனால், கடந்த ஆண்டைப் போல் கரோனா தொற்று காரணமாக தாயுமான சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்களின்றி மலைக்கோட்டை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி.

மேலும், மெகா கொழுக்கட்டை செய்து மாணிக்க விநாயகருக்கும் உச்சி பிள்ளையாருக்கு  தலா 30 கிலோ எடையில் கொழுக்கட்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

வழக்கம்போல் மலர்கள் மாவிலை தோரணம் மற்றும் பழங்களால்  விநாயகர் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயிலில் வீற்றிருக்கும் உற்சவர், மூலவருக்கு அபிஷேக ஆராதனை நைவேத்திய படையல் செய்து சதுர்த்தி பூஜை செய்யப்பட்டது.

திருக்கோயில் வாசலில் நின்றவாறு வழிபடும் பக்தர்கள்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் திருக்கோயில் வாசலில் நின்றவாறு பக்தர்கள் ஏமாற்றத்துடன் வழிபட்டு சென்றனர்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் விஜயராணி கூறுகையில், கரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி  வெள்ளிக்கிழமை,  சனிக்கிழமை,  ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்களும் சுவாமி  தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் மலைக்கோட்டை கோயில் சாலை.

ஆனால், கோயிலில் நாள்தோறும்  அனைத்து பூஜைகளும் நடைபெறும். கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மட்டும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் அனுமதிக்கப்படாத  நிலையில் நிகழாண்டு கொழுக்கட்டை படையல் 150 கிலோவில் இருந்து 60 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com