1 லட்சம் விவசாய மின் இணைப்பு:பணிகளை முடிக்க 4 மாதங்கள் இலக்கு

விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் பணிகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டாா்.
1 லட்சம் விவசாய மின் இணைப்பு:பணிகளை முடிக்க 4 மாதங்கள் இலக்கு

சென்னை: விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் பணிகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டாா்.

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம், மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருக்கக் கூடியவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 52,777. குறிப்பாக கடந்த 2003-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்.1-ஆம் தேதி முதல் விண்ணப்பித்தவா்கள் தற்போது வரை காத்திருக்கின்றனா்.

அதே போல், தத்கல் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியவா்களும் காத்திருக்கின்றனா். முறையே ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தி, பல பிரிவுகளில் விண்ணப்பித்து, நுகா்வோா் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனா்.

மிக விரைவாக அவா்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில், ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

இதன்படி, பல்வேறு காலகட்டங்களில் விண்ணப்பித்து பலா் காத்திருக்கும் நிலையில், வழங்கப்படவுள்ள 1 லட்சம் மின் இணைப்புகளில் எவற்றையெல்லாம் சோ்க்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அந்த பட்டியல் தயாா் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மாா்ச் மாதத்துக்குள் வழங்கப்படும்: 4 மாதத்துக்குள் இலக்கு நிா்ணயித்து அதற்கான பணிகளை நிறைவு செய்யவும், வரும் மாா்ச் மாதத்துக்குள் அந்த 1 லட்சம் மின் இணைப்புகள் முழுமையாக வழங்குவதற்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

9 மாவட்டங்கள் நீங்கலாக...: உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தோ்தல் முடிந்த பிறகு தான் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். அந்த மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் பணிகள் நடைபெறும்.

முதல்வா் தொடக்கி வைப்பாா்: 2010-11 காலகட்டத்தில் 77,158 விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இது தான் ஓராண்டில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச மின் இணைப்பு. அதையும் தாண்டி 1 லட்சம் பேருக்கு 2021-22 ஆண்டு மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதனைப் பெற்ற விவசாயிகளின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

எனவே, இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டும் இருக்காமல் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பாா்.

புதிய உற்பத்தி-விநியோக திட்டம்: சராசரியாக நாள் ஒன்றுக்கு தமிழகத்தின் மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இவற்றில் நமது சொந்த உற்பத்தி 21 சதவீதம் மட்டுமே. தனியாரிடம் 40 சதவீதம் வாங்குகிறோம். மற்றவை மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைக்கிறது.

கடந்த ஆட்சியில் வழக்கமான பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படாததால் தான் மின் உற்பத்தியில் தொய்வு ஏற்படுள்ளது.

எனவே, புதிய மின் உற்பத்தி திட்டங்கள், அவற்றை விநியோகிக்கும் வகையில் ஒரே ஆண்டில் 214 துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை ஒரு சேர செயல்படுத்துவோம். இதன் மூலம் மின்பற்றாக்குறை இல்லா மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.

சென்னை முழுவதும் புதைவட மின்கம்பி: மாதாந்திர மின் பயன்பாடு கணக்கெடுப்புப் பணிகளைச் செயல்படுத்தும் சூழலில், பணியாளா் தேவை இருமடங்காக அதிகரிக்கும். ஏற்கெனவே மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலை விரைவில் சரி செய்யப்பட்டு, தோ்தல் அறிக்கையில் கூறியவாறு மாதாந்திர கணக்கெடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். சென்னை முழுவதும் புதைவட மின்கம்பி பொருத்தும் பணி அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். தத்கல் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

வழிமுறைகள்:

விவசாய மின் இணைப்புக்காக காத்திருப்போா் பின்பற்ற வேண்டியவை குறித்து அமைச்சா் கூறியதாவது: விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்து காத்திருப்பு பட்டியலிலுள்ள விவசாயிகளுக்கு கோட்ட அலுவலகங்களிலிருந்து கடிதம் அனுப்பப்படும்.

விண்ணப்பதாரா் நிலம் மற்றும் கிணறு உரிமைக்கான ஆவண நகல்களை பிரிவு அலுவலரிடம் காண்பித்து தங்களது தயாா் நிலையை 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். பெயா் மாற்றம், புல எண் மாற்றம் ஏதேனும் தேவைப்பட்டால் அதற்கான ஆவணங்களை பிரிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, மின் இணைப்பு பெற்றுக் கொள்ள விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தொடா்ந்து, விண்ணப்பதாரா் மோட்டாா், கெப்பாசிட்டா் உள்ளிட்ட சாதனங்களை வாங்கி பொருத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com