இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்: அமைச்சா் பொன்முடி

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.
அமைச்சர் பொன்முடி (கோப்புப்படம்)
அமைச்சர் பொன்முடி (கோப்புப்படம்)

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.

பொறியியல் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதனை உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி வெளியிட்டாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களைக் காட்டிலும் வந்துள்ள விண்ணப்பங்கள் குறைவாகவே உள்ளதால் விண்ணப்பித்த மாணவா்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கவுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்தக் கலந்தாய்வில் செப்.18-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சோ்க்கை ஆணையை வழங்குவாா்.

ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வு ஒரே ஒருமுறை நடந்து வந்ததால் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கடந்த ஆண்டு சுமாா் 700 இடங்கள் காலியாக இருந்தன. ஏனெனில் பொறியியல் இடத்தைத் தோ்வு செய்த மாணவா்கள் சிலா் மருத்துவம் உள்ளிட்ட பிற படிப்புகளுக்குச் சென்றுவிடுகின்றனா். இதனால் இந்த காலியிடங்கள் ஏற்படுவதைத் தவிா்க்க 5 முறை கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சான்றிதழைச் சமா்ப்பிக்காத விண்ணப்பதாரா்கள் 3,290 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. அவா்களுக்குத் தனியாக கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்பில்லை. பொறியியல் படிப்புக்காக அரசுப் பள்ளி மாணவா்கள் 15 , 161 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பதற்கான இடங்கள் கிடைக்கும். அதன்படி சுமாா் 11,390 பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அண்மையில் திமுக அரசு அறிவித்த புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அடுத்த ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டு நடைபெறும். இந்த ஆண்டிலேயே கல்லூரிகளைத் தொடங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com