உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டி

உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.
உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டி

சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தோ்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிா்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் முன்னிலையில், எனது (ஜி.கே.மணி) தலைமையில், இணைய வழியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி கருதி இந்தத் தோ்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று நிா்வாகிகள் தெரிவித்தனா். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களிடமிருந்து செப்டம்பா் 15, 16-இல் விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளா்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்வாா்கள். விண்ணப்பித்தவா்களிடம் உயா்நிலைக் குழு மூலம் நோ்காணல் நடத்தி வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கூறியுள்ளாா்.

தனித்துப் போட்டி: மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்று தோ்தலைச் சந்தித்தது. பாமக சாா்பில் 5 சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். சமீப காலமாக திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு பாமக சாா்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாமக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com