ரூ.900 கோடி கோயில் சொத்துகள் மீட்பு

தமிழகத்தில் இதுவரை ரூ.900 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
ரூ.900 கோடி கோயில் சொத்துகள் மீட்பு

திருச்செந்தூர்/திருச்சி: தமிழகத்தில் இதுவரை ரூ.900 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம்,  மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை  வந்தனர்.

அப்போது,  தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் கோயிலில் பக்தர்களின் தேவை குறித்து அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தபின் அவர் செய்தியாளர்களிடம்  கூறியது: இக்கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் கோயிலில் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வரைவுத் திட்டம் தயார் செய்யப்பட்டு தனியார் மற்றும் அறநிலையத்துறை பங்களிப்புடன் ரூ. 150 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள், குடிநீர், கழிப்பிட வசதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான ஆய்வு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சில மாற்றங்களைச் செய்ய மீண்டும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். பின்னர் முதல்வரின் உத்தரவைப் பெற்று இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

பக்தர்களின் வசதி கருதி திருச்செந்தூர்,  திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் வியாழக்கிழமை (செப். 16) முதல் முழு நேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைக்க உள்ளார்.  கடந்த 4-ஆம் தேதி வரை சுமார் ரூ. 642 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது அது  ரூ.900 கோடியை தாண்டியுள்ளது. நாங்கள் கூறிய இலக்கை விட கூடுதலாக மீட்கப்பட்டுள்ளது என்றார் அவர். 

ஆய்வின் போது, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன்,  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,  கோட்டாட்சியர் மு.கோகிலா,  உதவி  காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங்,  வட்டாட்சியர் (பொ) ராமச்சந்திரன், திருக்கோயில் இணை ஆணையர்  (பொ) ம.அன்புமணி, உதவி ஆணையர் வே.செல்வராஜ், கண்காணிப்பாளர்கள் ஆனந்த், ராமசுப்பிரமணியன், மாரிமுத்து, ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருச்சியில்: சமயபுரம் கோயிலில் நடைபெறும் அன்னதான திட்ட ஏற்பாடுகள் குறித்து  அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தபின் அவர் கூறியதாவது: 

திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின் அறிவுறுத்தலாக உள்ளது. இதற்கான தகவல்கள் பெறப்பட்டு, 5 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோர் நிரந்தரம் செய்யப்படுவர். இதில் விடுபட்டோர் மீண்டும் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

யானைப் பாகன்களுக்கு ஊதியம், பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கையும் பரிசீலிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 180 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாக சில வழிமுறைகளை புதிதாகச் செயல்படுத்த உள்ளோம். அதன்படி அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டு என்றிருப்பதை 2 ஆண்டாக மாற்றவுள்ளோம் என்றார். ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், ஆட்சியர் சு. சிவராசு, மண்டல இணை ஆணையர் சுதர்சன், இணை ஆணையர் கல்யாணி, எம்எல்ஏ-க்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com