தமிழகத்தின் தியாக தீபங்கள் - 32: பெரியார் ஈ.வெ.ராமசாமி

"வெள்ளைக்கார ஆட்சியை ஒழித்தே தீரவேண்டுமென்ற ஆவேசத்துடன் காங்கிரஸில் சேர்ந்தேன்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 32: பெரியார் ஈ.வெ.ராமசாமி


"வெள்ளைக்கார ஆட்சியை ஒழித்தே தீரவேண்டுமென்ற ஆவேசத்துடன் காங்கிரஸில் சேர்ந்தேன். அப்படி சேர்ந்தபோது ஈரோடு நகர சபைத் தலைவர் பதவி உள்பட 29 பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டுத்தான் சேர்ந்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார் பெரியார் ஈ.வெ.ரா.

1919}இல் நடைபெற்ற அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். உடன் வ.உ.சி.யையும் அழைத்துச் சென்றார்.

கல்கத்தாவில் 1920}இல் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு மாநாட்டில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் தீர்மான வடிவம் பெற்றது. இதில் பங்கேற்று பெரும் பங்களிப்புச் செய்தார்.

ஒத்துழையாமையைத் தனது உயிர்க் கொள்கையாகக் கொண்டார். ஒத்துழையாமை முடிவுகளில் நீதிமன்றப் புறக்கணிப்பு முக்கியமானது. பிறருக்குக் கடன் கொடுத்த வகையில் திரும்பி வரவேண்டிய தொகைக்கு நீதிமன்றம் செல்வதைத் தவிர்த்தார். சேலம் சி.விஜயராகவாச்சாரியார் அத்தொகையை நீதிமன்றம் மூலம் மீட்க நுட்பமான மாற்று ஆலோசனைகளை வழங்கியும் பிடிவாதமாக மறுத்தார். அதனால் மிகப்பெரும் தொகையை அக்காலத்திலேயே இழந்தார்.

1925}இல் காங்கிரûஸ விட்டு வெளியேறிய பிறகும் "ஒத்துழையாமையே மருந்து' என்ற தலையங்கம் எழுதினார்.  

கதர்த் துணிகளைத் தனது தோளில் சுமந்து ஊர் ஊராகச் சென்று கடை விரித்துப் பிரசாரம் செய்து மக்களைக் கதர் மயமாக்க இரவு பகல் பாராது உழைத்தார். கள் இறக்கிக் கொள்ள தனது தோட்டத்திலிருந்த தென்னை மரங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தார். காந்தியடிகள் அறிவித்த மதுவிலக்குக் கொள்கையைக் குத்தகைதாரரிடம் எடுத்துச் சொல்லியும் எடுபடாத சூழலில் ஒரே நாளில் 500}க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

பெரியார் ஈ.வெ.ரா. வீட்டில் காந்தியடிகள் தங்கியிருந்தபோதுதான் கள்ளுக்கடை மறியல் போராட்ட முடிவு எடுக்கப்பட்டது. ஈரோட்டில் கள்ளுக்கடை முன்பாக மறியல் போராட்டம் நடத்தி சிறை சென்றார். விடுதலையானவுடன் மீண்டும் மறியலில் ஈடுபட்டார். தீவிரத்தை உணர்ந்த அரசு 144 தடை விதித்தது. அதையும் மீறிப் போராடி மீண்டும் கைதானார். எஃகு போன்ற உறுதியுடன், அஞ்சாமை என்ற ஆயுதம் தாங்கி, பின்விளைவுகளைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் போர்க்குணத்துடன் களம் இறங்குவதுதான் அவரின் தனித்தன்மை.

கோயில் அருகில் உள்ள சாலைகளில் தீண்டத்தகாதோர் நடக்கக் கூடாது என்றிருந்த அநீதிக்கு எதிராக வைக்கத்தில் வலிமைமிக்க போராட்டம் நடத்தினார். சிறை சென்றார். உரிமைகளை மீட்டெடுத்தார். ஒத்துழையாமை இயக்கம், காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்கள் போன்றவற்றை ஆங்கில ஆட்சிக்கு எதிரான ஆயுதங்களாக்கினார்.

தமிழ் மாகாண காங்கிரஸ் செயலர், தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என பல உயர் பொறுப்புகள் வகித்துள்ளார்.

1925}இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டின்போது காங்கிரûஸ விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். அதுவரை அரசியல் விடுதலைக் களம் கண்டவர், அதன்பிறகு சமூக விடுதலைப் போராளியாகப் பரிணமித்தார்.
"தமிழ்நாடு காங்கிரஸில் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார் திரு.வி.க.}த.ஸ்டாலின் குணசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com