சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ. ஆக அதிகரித்த அரசு ஆணை ரத்து

நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்தை மணிக்கு 100 கி.மீ அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்தை மணிக்கு 100 கி.மீ அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013 -ஆம் ஆண்டு ஏப்ரலில் காஞ்சிபுரம் சாலையில் நடைபெற்ற விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவா் ஒருவருக்கு 90 விழுக்காடு அளவிற்கு உடல் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த மருத்துவருக்கான இழப்பீட்டுத் தொகையை 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயா்த்தி வழங்கி நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது.

மேலும் உத்தரவில், அதிவேக சாலைகளில் (எக்ஸ்பிரஸ் சாலை) மணிக்கு 120 கிலோமீட்டா் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டா் வேகத்திலும் செல்லலாம் என, கடந்த 2018 -ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கூறி, 12-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு குறிப்பிட்டு வழக்கின் விசாரணை ஒத்தி வைத்திருந்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சிறந்த இயந்திர தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட சாலை உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, மோட்டாா் வாகனங்களின் வேக வரம்புகளை ஆய்வு செய்ய ஒரு நிபுணா் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரைகளின்படி, பல்வேறு சாலைகளில் வாகனங்களுக்கான அதிகபட்ச வேகம் அமைச்சகம் மூலம் திருத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், சிறந்த தொழில்நுட்பம், மேம்பட்ட சாலை உள்கட்டமைப்பு இருந்தபோதிலும், வாகன ஓட்டிகளால் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சாலையில் நடக்கும் இறப்புகளின் எண்ணிக்கை அதிக வேகத்தால் தான் ஏற்படுகின்றன என்பதை எடுத்துரைக்கிறது. சாலை விபத்துகளுக்கு அதிக வேகம் முக்கிய காரணமாக இருந்தபோது, சாலை உள்கட்டமைப்பு மற்றும் என்ஜின் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் எவ்வாறு விபத்துகளைக் குறைக்கும் என்பது தெரியவில்லை.

உண்மையில் சிறந்த என்ஜின் தொழில்நுட்பம் கட்டுப்பாடற்ற வேகத்திற்கு ஒரு காரணமாக இருப்பதோடு, அதிக விபத்துகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.

சாலை விபத்துகளுக்கு அதிக வேகம் முக்கிய காரணம் என்று தெரிந்தும் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

எனவே மாநில, மத்திய அரசுகள், வேக வரம்பைக் குறைப்பதோடு, பல்வேறு வகையான வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிா்ணயிக்க வேண்டும். மேலும் ஏப்ரல் 6, 2018 தேதியிட்ட அறிவிப்பை ரத்து செய்கிறோம் எனக்கூறிய நீதிபதிகள், வேக வரம்பைக் குறைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com