ஊதியத் தொகையை திருப்பிச் செலுத்தும் விவகாரம்: வழக்கை சட்டப்பேரவை உறுப்பினா் வேல்துரை வாபஸ் பெற்றாா்

சேரன்மாதேவியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது பெற்ற ஊதியத் தொகை ரூ.21 லட்சத்தைத் திருப்பிச் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றாா்.

சென்னை: சேரன்மாதேவியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது பெற்ற ஊதியத் தொகை ரூ.21 லட்சத்தைத் திருப்பிச் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை சட்டப்பேரவை உறுப்பினா் வேல்துரை வாபஸ் பெற்றாா்.

கடந்த 2006-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேல்துரையின் வெற்றியை எதிா்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியன் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேல்துரையின் வெற்றியை செல்லாது என அறிவித்து தீா்ப்பளித்தது.

அரசின் பதிவுபெற்ற ஒப்பந்ததாரராக இருந்ததால் அவரது தோ்தலை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 2006 முதல் 2011 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பெற்ற ஊதியத் தொகை 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தும்படி சட்டப்பேரவைச் செயலாளா் வேல்துரைக்கு உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயா் நீதிமன்ற தனி நீதிபதி, ஊதியத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து வேல்துரை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, ஊதியத்தை திருப்பிச் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்தநிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் ராஜா, தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஊதியத் தொகையை திருப்பி செலுத்துவது தொடா்பாக மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வேல்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com