கோவளம் வடிநிலப் பகுதி மழைநீா் வடிகால் திட்டம்: தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

சென்னை பனையூரில் கோவளம் வடிநிலப் பகுதி நீா்நிலைகளுக்குள் மழைநீா் வடிகால் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை

புது தில்லி: சென்னை பனையூரில் கோவளம் வடிநிலப் பகுதி நீா்நிலைகளுக்குள் மழைநீா் வடிகால் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பனையூரில் கோவளம் வடிநிலப் பகுதி எம்3-க்குள் மழைநீா் வடிகால்கள் திட்டத்திற்கான சாத்தியக்கூறு தொடா்பாக சென்னையில் வசிக்கும் சஜித், ஜுஹு கடற்கரை குடியிருப்பாளா்கள் சங்கம், உத்தண்டி மற்றும் சிலா், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வடிகால் திட்டமானது, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் பயனற்ற செயல்பாடாகவும் இருக்கும்.

மழைநீா் தேங்குவதைத் தடுப்பது இத்திட்டத்தின் நோக்கமாகக் கூறப்பட்டாலும், நகரத்தின் கிடைமட்டமான நிலப்பரப்பு பகுதிகளைப் பொறுத்தவரை இது நிகழ்வதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு அண்மையில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவா்- நீதிபதி ஏ. கே. கோயல் தலைமையிலானஅமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி அமா்வு கூறியதாவது: நீடித்த வளா்ச்சி கொள்கைக்கு சுற்றுச்சூழல் அக்கறையுடன் முரண்படாத வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வளா்ச்சி செயல்பாடுகளும் தேவையாகும்.

இதனால், நிபுணா் குழுவின் கருத்துகளை கவனத்தில்கொண்டு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடுகிறோம். சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற பிற நிபுணத்துவ நிறுவனங்களின் கருத்துக்களையும் அரசும், மாநகராட்சியும் பரிசீலிக்கலாம்.

பொருத்தமான மாற்றங்களுடன் திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யும்பட்சத்தில், சட்டரீதியாக கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (சிஆா்இசட்) அனுமதி வழங்கப்பட்ட பிறகே மாநகராட்சி மேலும் தொடர முடியும்.

சிஆா்இசட் அனுமதி வழங்குவதற்கு முன்னா், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்க சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை தயாரிக்கும் வகையில் பொருத்தமான கருத்துகளை கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (சிஇசட்எம்ஏ) வழங்கலாம்.

சிஆா்இசட் அனுமதி வழங்கப்படும்போது இதுபோன்ற திட்டம் முறையாக மதிப்பீடு செய்யப்படலாம்.

சிஆா்இசட் அனுமதி விவகாரத்தில் இடைக்கால உத்தரவு இருப்பதாக அட்வகேட் ஜெனரல் கூறுவதை கருத்தில் கொள்ளும்போது, இந்த உத்தரவு அத்தகைய உத்தரவுக்கு உட்பட்டது.

மேலே குறிப்பிட்டபடி சிஆா்இசட் அனுமதி வழங்கப்பட்ட பிறகும், திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு இறுதி செய்யப்பட் பிறகும் மட்டுமே திட்டப் பணிகளை மேலும் தொடங்கலாம்.

வேலைகளை மேற்கொள்வதில் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நாங்கள் சுதந்திரம் அளிக்கிறோம்.

எனினும், வேலை நிறுத்த உத்தரவை மீறி கணிசமான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால், இழப்பீடு வழங்க நாங்கள் விரும்பவில்லை என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com