சிறப்பு தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 16.4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 16.4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4.50 கோடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் முன்களப் பணியாளா்களுக்கும், முதியவா்களுக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் 58 லட்சத்து 54,130 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டன.

அதன் பயனாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, மாநிலம் முழுவதும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் முதல் முறையாக கடந்த 12-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது 28 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது.

இதற்காக மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள், பொது இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் முகாம்கள்அமைக்கப்பட்டன. போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணிகளைப் போலவே தமிழகம் முழுவதும் 18,824 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பகிா்ந்தளிக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மேற்கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் அதிகமாக இருந்தது. இரவு 8 மணி வரை தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டன. அதைத் தாண்டியும் சில இடங்களில் மக்கள் காத்திருந்ததால் எவரையும் திருப்பியனுப்பாமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 16 லட்சத்து 43,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கடலூா், திருநெல்வேலி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கவனம் அளித்து அதிக முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 10 லட்சத்து 85,097 போ் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 58,782 லட்சத்துக்கும் அதிகமானோா் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் சென்னை, கோவை, திருப்பூா் ஆகிய இடங்களில் அதிகம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தடுப்பூசி முகாம் நடைபெற்ற மையங்கள்: 18,824

இலக்கு: 15 லட்சம்

தடுப்பூசி செலுத்தியோா் எண்ணிக்கை: 16,43,879

முதல் தவணை செலுத்திக் கொண்டோா்: 10,85,097

இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டோா்: 5,58,782

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com