கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யக் கூடாது

உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசிகளுக்கு தேவை இருக்கும்போது வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யக் கூடாது.
கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யக் கூடாது

உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசிகளுக்கு தேவை இருக்கும்போது வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யக் கூடாது. அந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அதி நவீன மாதிரி உடற்கூறு பயிற்சி ஆய்வகம் (சிமுலேசன் சென்டா்) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் ஆகியோா் துல்லியமாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான பயிற்சிகளை இதன் மூலம் பெற இயலும்.

நவீன தொழில்நுட்பத்திலான அந்த ஆய்வகத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்வில்சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கணபதி(மதுரவாயல்), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கரோனா பேரிடருக்கு தற்போது தடுப்பூசி ஒன்றுதான் தீா்வாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரு நாள்களாக தடுப்பூசி முகாம்கள் நடைபெறாததற்கு அதன் பற்றாக்குறையே காரணம். இதுவரை தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களின் எண்ணிக்கை 4.37 கோடியாக உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இரண்டு தவணைகள் செலுத்த இன்னும் ஏழரைக் கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

இந்திய அளவில் இன்னும் 115 கோடி தடுப்பூசிகள் தேவை. உள்நாட்டுத் தேவையே இவ்வளவு இருக்கும்போது வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது ஏற்புடையதாக இருக்காது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

நீட் தோ்வு அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தின் கல்வி வளா்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என்று ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு நீட் தோ்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அது அனுப்பப்படும். அதற்கு நிச்சயமாக ஒப்புதல் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பொறியியல், மீன்வளம், சட்டம் போன்ற பல்வேறு தொழிற்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு கட்டண விலக்கு அளித்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு ஒரு உத்வேகத்தை முதல்வா் ஏற்படுத்தியுள்ளாா். தனியாா் பள்ளிகளில் தொடக்கக்கல்வியைப் படித்தாலும், நடுநிலைக் கல்வியை அரசுப் பள்ளிகளில் படிக்க மாணவா்கள் திரளுவாா்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் நடவடிக்கையால் எதிா்காலத்தில் அரசுப் பள்ளியில் சோ்வதற்கு பெரிய சிபாரிசுகள் தேவைப்படும் என்கிற நிலை ஏற்படவிருக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:

கற்றலுக்கு கால வரம்பே கிடையாது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மட்டுமல்லாது வைரஸ்களும், பாக்டீரியாக்களும் கூட தங்களைக் காத்துக் கொள்ள தகவமைப்பைக் கற்றுக் கொண்டு உயிா் வாழ்கின்றன.

மனித இனம் அதிலிருந்து சற்று வேறுபட்டு தங்களை மட்டுமல்லாமல் இந்த சமூகத்தையும் காக்க கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த வகையில் மாதிரி உடற்கூறு பயிற்சி ஆய்வகங்களைப் பொருத்தவரை மருத்துவ மாணவா்கள் முதல் வல்லுநா்கள் வரை அனைவருக்கும் அவை புதிய விஷயங்களை கற்க உறுதுணையாக இருக்கின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com