‘சட்டம் - ஒழுங்கை சீரழிப்போரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்’: ஓபிஎஸ்

சட்டம் - ஒழுங்கை சீரழிக்க நினைப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)

சட்டம் - ஒழுங்கை சீரழிக்க நினைப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களில் மனித நேய ஜனநாயகக்‌ கட்சிமின்‌ வசிம்‌ அக்ரம்,‌ தி.மு.க. முன்னாள்‌ மாநிலங்களவை உறுப்பினரின்‌ பேரன்‌ வெட்டிக்‌ கொலை, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை என வரிசையாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 ஒரு மாநிலம்‌ வளர்ச்சிப்‌ பெற வேண்டுமெனில்‌, அந்த மாநிலத்தின்‌ மக்கள்‌ வளம்‌ பெற வேண்டுமெனில்‌, மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைய வேண்டும்‌. மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைவதற்கு மனித வள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான கல்வி, சிறந்த ஆரோக்கியம்‌ என பல்வேறு காரணிகள்‌ இருந்தாலும்‌, இவை எல்லாவற்றையும்‌ விட மிக முக்கியமான காரணியாக விளங்குவது அமைதியான சூழல்‌. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்‌, ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌.

மாறாக, சட்டம்‌-ஒழுங்குப்‌ பிரச்சனைகளால்‌ பொது அமைதிக்கு குந்தகம்‌ ஏற்படும்‌ மாநிலங்களில்‌ பொருளாதார வளர்ச்சிக்கு இடம்‌ இருக்காது. ஏனெனில்‌, அமைதி குன்றிய மாநிலங்களில்‌ தொழிற்சாலைகளை துவங்குவதற்கும்‌, புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ முன்வரமாட்டார்கள்‌ என்பதோடு, அந்த மாநிலத்தில்‌ உள்ள மக்களும்‌ தங்களைத்‌ காத்துக்‌ கொள்வதிலேயே நேரத்தை செலவிடவேண்டிய சூழல்‌ ஏற்படுமே தவிர, பொருளாதாரத்தை மேம்படுத்தும்‌ நடவடிக்கைகளில்‌ தங்களை ஈடுபடுத்திக்‌ கொள்ள இயலாது.

தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌, சட்டம்‌-ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகள்‌ ஒருபுறம்‌ எடுக்கப்பட்டு வந்தாலும்‌, கரோனா தொற்று நோய்‌ பாதிப்பு ஓரளவு கூட்டுக்குள்‌ இருப்பதையடுத்து, பொருளாதார வளர்ச்சி துவங்கி இருக்கின்ற இந்த நேரத்தில்‌, கடந்த பத்து நாட்களாக ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

வாணியம்பாடியில்‌ மனித நேய ஜனநாயகக்‌ கட்சிமின்‌ மாநிலச்‌ செயலாளரும்‌, சமூக ஆர்வலருமான வசிம்‌ அக்ரம்‌ நடுரோட்டில்‌ வெட்டிக்‌ கொலை; தி.மு.க. முன்னாள்‌ மாநிலங்களவை உறுப்பினரின்‌ பேரன்‌ வெட்டிக்‌ கொலை; சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை; நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ இருக்கை கிராமத்தைச்‌ சேர்ந்த முபாரக்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை; கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமத்தைச்‌ சேர்ந்த ராஜா கடத்திக்‌ கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலை சேர்ந்த சங்கரசுப்ரமணியன்‌ தலை துண்டித்து கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கோபாலசமுத்திரம்‌ அருகே மாரியப்பன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொலை; ராணிப்பேட்டை மாவட்டம்‌, தப்பூர்‌ கோவிந்தாங்கல்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த ரங்கநாதன்‌ கட்டையால்‌ தாக்கி கொலை; விழுப்புரம்‌ மாவட்டம்‌, காரணை கிராமத்தைச்‌ சேர்ந்த லட்சுமி படுகொலை; சிவகங்கை அருகே குல்லுப்பட்டியைச்‌ சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர்‌ முத்துபாண்டி வெட்டிக்‌ கொலை; திருவண்ணாமலை மாவட்டம்‌, வீரானந்தல்லை சேர்ந்த வெங்கடேசன்‌ வெட்டிக்‌ கொலை; கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சிலேப்பள்ளியைச்‌ சேர்ந்த விவசாயி வெங்கடப்பன்‌ அரிவாளால்‌ வெட்டிக்‌ கொலை; கடலூர்‌ மாவட்டம்‌, குப்பங்குளத்தைச்‌ சேர்ந்த காந்திமதி வெட்டிக்‌ கொலை: கடலூர்‌ மாவட்டம்‌, மேல்மாம்பட்டுவை சேர்ந்த கோவிந்தராசு மர்ம மரணம்‌; தேவக்‌ கோட்டை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி பொதுச்‌ செயலாளர்‌ சுதிரவன்‌ வெட்டிக்‌ கொலை என எண்ணற்ற கொலைகள்‌ வரிசையில்‌, நேற்று திண்டுக்கல்‌, இ.பி. காலனியைச்‌ சேர்ந்த  நிர்மலா பட்டப்பகலில்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டு இருக்கிறார்‌. இது போன்ற மனிதாபிமானமற்ற கொடூரச்‌ சம்பவங்களுக்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இது மட்டுமல்லாமல்‌, சட்டம்‌-ஒழுங்கை நிலை நாட்டும்‌ பணியில்‌ ஈடுபட்டுக்‌ கொண்டிருக்கும்‌ காவல்‌ துறையினரையே திருப்பித்‌ தாக்கும்‌ சம்பவங்களும்‌ ஆங்காங்கே நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள்‌ தமிழ்நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சியை நிச்சயம்‌ பாதிக்கும்‌ என்பதில்‌ எள்ளளவும்‌ சந்தேகம்‌ இல்லை.

எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும்‌ அமைதியான சூழலை உருவாக்கிடும்‌ வகையில்‌, முதலமைச்சர்‌ அவர்கள்‌ சட்டம்‌-ஒழுங்குப்‌ பிரச்சனையில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி, சட்டம்‌-ஒழுங்கை சிரழிக்கும்‌ முயற்சிகளில்‌ ஈடுபடுவோரை இரும்புக்‌ கரம்‌ கொண்டு அடக்கவும்‌, கொலைக்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோரை சட்டத்தின்‌ முன்‌ நிறுத்தி உரியதண்டனை பெற்றுத்‌ தரவும்‌ அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com