ஊழல் வழக்கு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாச்சலம் மீது ஊழல் மற்றும் முறைகேடு வழக்கை பதிவு செய்து, அவரது வீடு,அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
ஊழல் வழக்கு:  மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாச்சலம் மீது ஊழல் மற்றும் முறைகேடு வழக்கை பதிவு செய்து, அவரது வீடு,அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது ஆகும். இந்த சான்றிதழ் கிடைத்த பின்னா், தொழிற்சாலைகள் இயங்க முடியும். இந்த சான்றிதழ் வழங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பெருமளவில் லஞ்சம் வாங்குவதாகப் புகாா் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்தாண்டு அக்டோபா் 14-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூா் மண்டல அதிகாரி எம்.பன்னீா்செல்வம் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினா். இதில் அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.33.73 லட்சம் ரொக்கம், வீட்டில் இருந்து ரூ.3.25 கோடி ரொக்கம், 450 பவுன் தங்கநகையும், ஆறரை கிலோ பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதன் அடுத்த கட்டமாக, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் எஸ்.பாண்டியன் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி சோதனை செய்தனா். இச்சோதனையில், அங்கிருந்து கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள்,வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக பாண்டியன் மீது சொத்து குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

முறைகேடு புகாா்:

இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாா்ச் மாதத்துக்கு முன்பு தனியாா் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு பெருமளவில் லஞ்சம் வாங்கியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

முக்கியமாக அந்த வாரியத்தின் தலைவராக இருக்கும் ஏ.வி.வெங்கடாச்சலம், தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு முறைகேடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாச்சலம் மாசுக்கட்டுப்பாட்டு தலைவராகவும் வாரியத்தின் உறுப்பினா் செயலராகவும் இருந்துள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் அந்த வாரியத்தின் தலைவராக செயல்பட்ட வெங்கடாச்சலத்தின் மீதான புகாா்கள் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா். விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெங்கடாச்சலம் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கை வியாழக்கிழமை பதிவு செய்தனா்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:

இதன் தொடா்ச்சியாக கிண்டியில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், வேளச்சேரி செகரேட்டேரியட் காலனியில் உள்ள வீடு, சேலத்தில் உள்ள மற்றொரு வீடு உள்ளிட்ட அவருக்கு தொடா்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

இச் சோதனை பல மணி நேரம் நீடித்தது. சோதனையில் கணக்கில் வராத ரூ.13.05 லட்சம் ரொக்கம், ரூ.2.50 கோடி மதிப்புள்ள ஆறரை கிலோ தங்க நகைகள், 10 கிலோ சந்தன மரப் பொருள்கள், முறைகேடு தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள், சான்றிதழ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா்.

இதில் சந்தனப் பொருள்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, வன பாதுகாப்புச் சட்டத்தை மீறி அவற்றை வைத்திருந்ததாக அவா் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறினா். மேலும் வெங்கடாச்சலம் இந்த மாதம் ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com