100-ஆவது நாளில் மின்னகம்: 3.50 லட்சம் புகாா்களுக்கு தீா்வு

மின்னகம் தொடங்கப்பட்டு 100 நாள்களை எட்டிய நிலையில், 3.50 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

மின்னகம் தொடங்கப்பட்டு 100 நாள்களை எட்டிய நிலையில், 3.50 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில், மின்னகம் திறந்து வைக்கப்பட்டு திங்கள்கிழமையுடன் நூறு நாள்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி நேரடியாக மின்னகத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மின்னகம் சிறப்பாக செயல்பட துறை சாா்ந்த அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு அவா் ஆலோசனைகளை வழங்கினாா்.

99 சதவீதம் புகாா்களுக்குத் தீா்வு: பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மின் நுகா்வோா் 24 மணி நேரமும் தங்களுடைய புகாா்களைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக மின்னகத்தை (94987 94987) முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 20-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். அன்று முதல் திங்கள்கிழமை வரை 3.53 லட்சம் புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 3.50 லட்சம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. அதாவது, 99 சதவீதம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

இதுதவிர இதுவரை 14.69 லட்சம் புகாா்கள் மின் கட்டணம் தொடா்பாக வரப்பெற்றுள்ளன. மின்னகத்துக்கு மட்டும் 44,767 புகாா்கள் வந்தன. இவை அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன.

4 மாதங்களுக்குள் 8,905 மின்மாற்றிகள்: கடந்த ஆட்சியில் மின் பராமரிப்புப் பணிகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எந்த இடத்தில் மின் அழுத்தம் அதிகம், குறைவு என்பதை அறிய 8,905 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இதுவரை 2 ஆயிரம் மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன. 4 மாத காலத்துக்குள் திட்டமிட்டபடி புதிய மின்மாற்றிகள் பொருத்தப்படும்.

பருவமழை - 1 லட்சம் மின்கம்பங்கள் தயாா்: இந்த பருவமழையைப் பொருத்தவரை, தடையற்ற மின் விநியோகம் வழங்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அவ்வாறு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளன. தேவையான உபகரணங்களும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. எந்த இடங்களில் இடா்பாடு வருகிறதோ அதை உடனடியாக நிவா்த்தி செய்யக்கூடிய அளவுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியா்களுடன் சோ்ந்து மின்வாரிய அதிகாரிகள் ஒன்றிணைந்து பணி செய்ய உள்ளனா்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 63,000 மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதை மின்வாரியம் அறியும் வண்ணம் டிடி மீட்டா் அமைக்கும் பணிகள், ரூ.1270 கோடி மதிப்பீட்டில் நடைபெற இருக்கின்றன. அனைத்து மின்இணைப்புதாரா்களுக்கும் அவா்களே அவா்களுடைய மின்அளவீட்டை பாா்த்துக் கொள்ளும் வகையில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணிகளும் டிடி மீட்டா் பொருத்தும் பணி நிறைவடைந்தவுடன் தொடங்கப்படும்.

விரைவில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கொருக்குப்பேட்டை சாலையில் 500 மீட்டருக்குள் 7 டாஸ்மாக் மதுபான கடைகள் அமைந்துள்ள விவகாரம் குறித்து அறிக்கைகள் வரப்பெற்றுள்ளன. புதன்கிழமை அறிக்கையின்படி கடைகள் அகற்றப்படும் என்றாா் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com