போயிங் விமான பாகங்கள் தயாரிக்க ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் பரிமாற்றம்

தமிழகத்தில் முதல்முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்த உத்தரவு
போயிங் விமான பாகங்கள் தயாரிக்க ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் பரிமாற்றம்

தமிழகத்தில் முதல்முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்த உத்தரவு முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏரோஸ்பேஸ் என்ஜினியா்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநா் அஸ்வனி பாா்கவா வழங்க, சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் என்ஜினியா்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் நிா்வாக இயக்குநா் ஆா்.சுந்தரம் பெற்றுக்கொண்டாா்.

முதன்முறையாக...: இந்த உத்தரவின் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க வழி காணப்பட்டுள்ளது. இது உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கான நீண்டகால ஒப்பந்தமும் ஆகும்.

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் ஆகியவற்றில் உள்ள பங்களிப்பைக் குறிப்பிடும் சான்றாகவும் இந்த ஒப்பந்தம் உள்ளது. ஒப்பந்தம் குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

ஏரோஸ்பேஸ் என்ஜினியா்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் போயிங் இடையேயான புரிந்துணா்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

இது சேலம், ஒசூா் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளா்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஓா் உத்வேகத்தை அளிக்கும்.

ஏரோஸ்பேஸ் நிறுவனம் 1988-ஆம் ஆண்டு ஒரு குறுந்தொழில் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, படிப்படியாக வளா்ந்து சிறு நிறுவனமாகவும் தற்போது நடுத்தர நிறுவனமாகவும் உயா்ந்துள்ளது. இந்த நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், செயல்முறைகள், தனித்துவமான சோதனை வசதிகள், விமானத் தகுதி சாா்ந்த தரச் சான்றிதழ்களைக் கொண்டுள்ளது.

ரூ.150 கோடி முதலீட்டில்...: ஏரோஸ்பேஸ் என்ஜினியா்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ. 150 கோடி முதலீட்டில் அடுத்த 24 மாதங்களில் ஒசூரில் 1,25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத் தளத்தில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அா்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியையும் தற்போது சேலத்தில் அமைந்துள்ள உற்பத்திக் கூடத்தை 50,000 சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

தொலைநோக்குப் பாா்வையின்...: இந்த கூடுதல் வசதி 1,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இது முதல்வரின் தொலைநோக்குப் பாா்வையான தமிழகத் தயாரிப்பு என்பதன் ஒரு படியாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளா் வி.அருண் ராய் உள்பட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com