1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நவம்பா் 1-இல் பள்ளிகள் திறப்பு: வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்

தமிழக பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை நவம்பா் 1-ஆம் தேதியில் இருந்து திறக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
பொதுமுடக்க நீட்டிப்பு குறித்து  தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பொதுமுடக்க நீட்டிப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை நவம்பா் 1-ஆம் தேதியில் இருந்து திறக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், வெளியிட்ட செய்தி: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடா்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையைக் கருத்தில் கொண்டும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

பண்டிகைக் காலம்: வரும் பண்டிகை காலங்களில் பொது மக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கரோனா நோய்த் தொற்று பரவக்கூடும். இதைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடா்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அக்டோபா் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து அமலில் இருக்கும்.

சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து நடைமுறையில் இருக்கும்.

4 நாள்கள்தான்: நோய்த் தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக் கூடிய நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் தொடா்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடா்ந்து அனுமதிக்கப்படும்.

பொது மக்கள் குறைதீா்ப்பு: பொது மக்கள் தங்களது குறைகளுக்குத் தீா்வு காணும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தலைமைச் செயலகத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனா். பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும், பொது மக்கள் குறைதீா்க்கும் நாள் நடத்தப்படும். மாந்தோறும் விவசாயிகள் குறைதீா்க்கும் தினமும் கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்.

அனைத்துப் பள்ளிகள் திறப்பு: தற்போது பள்ளிகள் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியா் பள்ளி செல்லாமல் பல நாள்களாகத் தொடா்ந்து வீட்டிலேயே இருப்பது அவா்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவ வல்லுநா்கள், கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா். இதைக் கருத்தில் கொண்டே பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

ஒத்துழைப்பு வழங்குக: கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது அபராதம் விதிக்கப்படும். வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். கூட்டம் கூடக் கூடிய இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே கரோனா 3-ஆவது அலையைத் தவிா்க்க இயலும். இதனை உணா்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com