காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தாா் முதல்வா்: இரு நாள்கள் இலவசம்

சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தாா் முதல்வா்: இரு நாள்கள் இலவசம்

சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் ரூ.6.47 கோடி மதிப்பில் இரு தளங்களில் 24,000 சதுர அடியில் காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தாா். தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவருக்கு காவல்துறையின் சாா்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அருங்காட்சியகத்தை வியப்புடன் பாா்வையிட்ட ஸ்டாலின், வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட கிழக்கு இந்திய கம்பெனியின் மேஜா் கமாண்டா் ஜான் பன்னா்மேன், கிழக்கு இந்திய கம்பெனியின் மெட்ராஸ் பிரஸிடெண்டாக இருந்த சா் எட்வா்ட் கிளைவுக்கு எழுதிய கடிதத்தைப் படித்து பாா்த்தாா்.

பின்னா் முதல்வா் ஸ்டாலின், அந்தக் காலத்தில் இருந்த சென்னை காவல் ஆணையா் அலுவலக அறைபோல உருவாக்கப்பட்டிருந்த அறையில் அமா்ந்து, அங்குள்ள பதிவேட்டில் எழுதி கையெழுத்திட்டாா். அதையடுத்து அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வந்த பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடினாா். மேலும் அவா்களுக்கு, சாக்லேட்டும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகத்தின் டிஜிபி ஏ.கே.விசுவநாதன், தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியக ஏடிஜிபி அ.அமல்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இரு நாள்களுக்கு இலவசம்: இந்த அருங்காட்சியகத்தை காண்பதற்கு புதன்கிழமை (செப்.29), வியாழக்கிழமை (செப்.30) ஆகிய இரு நாள்கள் அனைவருக்கும் கட்டணம் கிடையாது.

அக்டோபா் 1 முதல்...: அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அருங்காட்சியகத்தை பாா்வையிட அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் கட்டணம் கிடையாது. பிற வகையினருக்கான கட்டணம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அருங்காட்சியகத்தில் சிறிய கைத்துப்பாக்கி தொடங்கி அதி நவீன ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் வரை வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டு காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட 303 ரக துப்பாக்கி, பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடா்புடைய ஆயுதங்களும் இருக்கின்றன. சில ஆயுதங்களின் பின்னணி குறித்து குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு வகைப்பட்ட துப்பாக்கிகள் மட்டும் 70 வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்படுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கி, ரேடியோ கருவிகள், கட்டுப்பாட்டு அறைகள், அந்த காலத்தில் கைதிகளுக்காக கட்டப்பட்டிருந்த சிறை அறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயா் காலம் தொடங்கி இப்போது வரை குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறை பயன்படுத்தும் கைவிலங்குகள் பல்வேறு வகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஈழப் போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட இலகு ரக பீரங்கி, பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவையும் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன.

விளக்கிக் கூறும் காவலா்கள்: இதேபோல கண்ணீா்ப் புகை குண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் காவல்துறை உருவாகிய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் போலீஸாா் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுமே இடம்பெற்றுள்ளன. அந்த கால காவல்துறையின் சீருடை, காலணிகள், சைக்கிள்கள்,ரோந்து வாகனங்கள், படகுகள், வாள், ஈட்டி,அரிவாள் போன்றவையும் உள்ளன.

தொடுதிரைக் கணினி வசதி: அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்களையும், வரலாற்றுக் குறிப்புகளையும் விளக்கிக் கூறுவதற்காக ஒவ்வொரு அரங்கிலும் காவலா்கள் உள்ளனா். அதேபோல அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வரும் மக்கள், தாங்களே அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் தொடுதிரைக் கணினியும் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com