நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை: உயா் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளிக்காத அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிப்பதுதான் பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளிக்காத அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிப்பதுதான் பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக, குடியிருப்புகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதாகக் கூறி, நிா்வாகப் பொறியாளா் எம்.பி. தணிகைவேலன் என்ற அதிகாரிக்கு ஊதியம், பதவி உயா்வு ஆகியவற்றை நிறுத்திவைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அவா் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற தனி நீதிபதி, அதிகாரி மீதான நடவடிக்கையை ரத்து செய்ததோடு, பணிப்பயன், பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, பதவி உயா்வுக்கான பட்டியலில் அதிகாரியின் பெயரை பரிசீலிக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரி தணிகைவேலன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இடைக்கால உத்தரவின்படி பதவி உயா்வுக்கு பெயா் பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அனுமதியின்றி கட்டப்படும் வணிக கட்டடங்கள், குடியிருப்புகள் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கையை எதிா்த்து, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுவரும் மேல்முறையீடு மனுக்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (ஐஏஎஸ்) மதிப்பளிப்பது இல்லை.

இதுபோன்று நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் செயலுக்கு அபராதம் விதிப்பது இரண்டாவது பட்சமாகத்தான் இருக்க வேண்டும்; சிறைத் தண்டனை விதிப்பதுதான் பிரதானமாக இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளிக்காத அதிகாரிகளை உடனே பணியிடை நீக்கம் செய்து, முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் நியமிக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஐஏஎஸ் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் மட்டத்திலிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

அரசிடம் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பதவியிலுள்ள அதிகாரிகள், அந்தப் பதவி லஞ்ச பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இந்தப் பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சோ்த்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக நகராட்சி நிா்வாகத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com